கேரள பக்தர்களை ஈர்க்கும் பழநி பிளாஸ்டிக் பொருட்கள்!
பழநி: பழநிகோயிலுக்கு வரும் கேரள பக்தர்கள், பிளாஸ்டிக், குடம்,வாளி உள்ளிட்ட பொருட்களை அதிகளவில் வாங்கிச்செல்கின்றனர். கோடைவிடுமுறை காரணமாக, பழநிகோயிலுக்கு பிறமாநில, மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக, கேரள மாநிலத்தை சேர்ந்த பக்தர்களின் வருகை கடந்த சிலநாட்களாக அதிகளவில் உள்ளது. இவர்கள், இடும்பன் மலைக்கோயிலில் சுவாமிதரிசனம் செய்துவிட்டு, பின் பழநிமலைக்கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஊர்களுக்கு திரும்பிசெல்லும்போது, பஞ்சாமிர்தம், அவுல் பொரி ஆகியவற்றை வாங்கிச்செல்கின்றனர். இத்துடன், பழநியில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் வாளி, குடங்கள், கூடைகளை அதிகளவில் விரும்பி வாங்குகின்றனர். இதன் காரணமாக கிரிவீதிகடைகளில், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதுகுறித்து பாலக்காட்டைச் சேர்ந்த யாமினி கூறுகையில்,பழநிகோயிலுக்கு அடிக்கடி வருகிறோம். இங்கு விற்கப்படும், பிளாஸ்டிக் பொருட்கள் தரமானதாகவும், விலைகுறைவாகவும் உள்ளதால், குடங்கள், வாளி போன்றபொருட்களை, வாங்கிச் செல்கிறோம். நீண்டகாலம் பயனளிக்க கூடியதாகவும் உள்ளது, என்றார்.