கோவிந்தராஜூலு சாமி கோவிலில் திருக்கல்யாண பிரம்மோற்சவம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சின்னமட்டராப்பள்ளி ராஜூலுமலையில் உள்ள கோவிந்தராஜூலு சாமி கோவிலில், 40ம் ஆண்டு திருக்கல்யாண பிரமோற்சவ விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது.விழாவின் முதல் நாளான கடந்த, 1ம் தேதி காலை மலைமீது கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து, 2ம் தேதி இரவு, 7 மணிக்கு, கருட வாகன உற்சவமும், 3ம் தேதி இரவு ஷேச வாகன உற்சவமும் நடந்தது.விழாவின், முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று பகல், 11 மணிக்கு, ஸ்வாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழாவில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று, யானை வாகன உற்சவம், நாளை (6ம் தேதி) ஆஞ்சநேயர் வாகன உற்சவமும், 7ம் தேதி வசந்த உற்சவம் மற்றும் அன்னதானம் நடக்கிறது.மேலும், விழா நடக்கும் நாட்களில் தினந்தோறும் நாகமணி பாகவதாரணி குழுவினரால் தெலுங்கு அரிகதை நிகழ்ச்சியும், இன்னிசை கச்சேரிகளும் நடக்கிறது.ஏற்பாடுகளை, சின்னமட்டாரப்பள்ளியை சேர்ந்த வெங்கடபதிநாயுடு குடும்பத்தினர் மற்றும் வெங்கடேசன், நாகப்பன், ரங்கப்ப நாயுடு குடும்பத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.