உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை சித்திரைத்திருவிழா: இன்று மீனாட்சிக்கு பட்டாபிஷேகம்!

மதுரை சித்திரைத்திருவிழா: இன்று மீனாட்சிக்கு பட்டாபிஷேகம்!

மதுரை: சித்திரைத்திருவிழாவின் எட்டாம் நாளான இன்று (மே.8) மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. இன்று இரவு 7.04 மணிக்கு மேல் இரவு 7.30 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு ஆறுகால் பீடத்தில் பட்டாபிஷேகம் நடக்கிறது. அம்மனுக்கு கிரீடம் சாற்றி செங்கோல் கொடுத்தல், கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், மீனாட்சி அம்மனிடம் இருந்து செங்கோல் பெற்று, சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்று வந்து, மீண்டும் மீனாட்சி அம்மன் திருக்கரத்தில் செங்கோலை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு அம்மன், சுவாமி தங்க வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து அருள்பாலிப்பர்.

இறைமாட்சி அதிகாரத்தில், திருவள்ளுவர் மன்னர்களுக்குரிய குணங்களை வரிசைப்படுத்தும் போது, தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம்மூன்றும் இருப்பவனே சிறந்த மன்னன் என்று குறிப்பிடுகிறார். மக்கள் நலனில் அக்கறை கொண்ட பெண்ணரசியாக மீனாட்சி அன்னையும் தூங்காமல் அருளாட்சி நடத்துகிறாள். மீன் எப்படி கண்களை இமைக்காமல் முட்டைகளை பார்த்து குஞ்சாக்குகிறதோ அதுபோல, அம்பிகையும் தன் அருள்பார்வையால் குறைகளைப் போக்கி உயிர்களை நல்வழிப்படுத்துகிறாள். அதனால், மீன் போன்ற கண்களை உடையவள் என்னும் பொருளில் மீனாட்சி, கயற்கண்ணி ஆகிய பெயர்களோடு விளங்குகிறாள். அவள் ஆளும் நகரமும் தூங்கா நகரமாக உள்ளது. மலையத்துவஜ பாண்டியனின் மகளாகப் பிறந்த மீனாட்சி கல்வியிலும் சிறந்து விளங்கினாள். அஞ்சாத நெஞ்சுறுதியும், மனத்துணிவும் அவளுடைய இயல்பாக இருந்தன. வீரத்தின் அடையாளமாக அவளுடைய இடுப்பில் குறுவாள் ஒன்றை வைத்திருப்பாள். ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்பதை  நிரூபிக்கும் விதத்தில் மலையத்துவஜ பாண்டியனும், தன் மகளுக்கு பட்டம் சூட்டி அழகுபார்த்தான். புராணகாலத்தில் நடந்தகோலாகல விழா இப்போதும் சித்திரை திருவிழாவின் எட்டாம் நாள் நடத்தப்படுகிறது.

நேற்று தடைகளை நீக்கும் நந்தி தரிசனம்: மதுரை சித்திரைத்திருவிழாவின் ஏழாம்நாளான நேற்று சுந்தரேஸ்வரர் நந்திகேஸ்வர வாகனத்திலும், மீனாட்சி யாளி வாகனத்திலும் மாசிவீதிகளில் பவனி வந்தனர். ஏராளமான பக்ததர்கள் தரிசனம் செய்தனர். இந்த  தரிசனத்தைக் காண்பவர்களின் செயல்கள் தடையின்றி நிறைவேறும். முன்ஜென்ம பாவமும் நீங்கும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !