உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமசாமி கோவிலில் முதல் "பட்டாபிஷேக விழா

கோதண்டராமசாமி கோவிலில் முதல் "பட்டாபிஷேக விழா

சேலம்: சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில், நேற்று, பட்டாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இலங்கையில் ராவணனை வதம் செய்து திரும்பும் வழியில், ராமன், பரத்வாசர் என்ற முனிவரது ஆஸ்ரமத்தில் தங்கியுள்ளார். அவரது விருப்பப்படி, அயோத்தி செல்லும் முன், அயோத்தியாப்பட்டணத்தில், தன் "பட்டாபிஷேக காட்சியை காட்டிச் சென்றார், என்பது ஐதீகம். கடந்த, 500 ஆண்டுகளுக்கு முன், மதுரை திருமலை நாயக்கரால் கோதண்டராமசாமி கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலில், ராமர் பட்டாபிஷேக கோலத்திலயே அமர்ந்திருப்பார். ராமர் கோவில்களில், வலது புறமாக அமர்ந்திருக்கும் சீதா தேவி, இந்த கோவிலில் இடது புறமாக அமர்ந்திருப்பது, தனிச்சிறப்பு. அயோத்தியாப்பட்டணம் கோதண்டராமசாமி கோவிலுக்கு, சித்ரா பவுர்ணமியான, நேற்று காலை, 8 மணிக்கு, ஏராளமான பக்தர்கள் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். காலை, 10 மணிக்கு, கோதண்டராமருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பகல், 1 மணிக்கு உற்சவருக்கு மஹா அபிஷேகம் செய்யப்பட்டது.

கோவில் பிரகாரத்தில் உள்ள சங்கரத்தாழ்வார், கருடாழ்வார், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது. மதியம், 2 மணிக்கு, தங்கம், வைரம் உள்ளிட்டஆபரணங்கள் மூலம், கோதண்டராமர் அலங்கரிக்கப்பட்டார். அவரது தலைøயில், தங்க கிரீடம் பொருத்தப்பட்டு, பட்டாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. அயோத்தியாப்பட்டணம், வீராணம், தாதனூர், சேலம், வாழப்பாடி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பட்டாபிஷேக விழாவில் கலந்து கொண்டு, இறைவனை வழிபட்டு சென்றனர். கோவிலில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சேலம் மண்டலத்திலேயே முதல் பட்டாபிஷேக விழா என்பதால், சேலம் மட்டுமின்றி தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி சென்றனர். பட்டாபிஷேகத்தை முன்னிட்டு, 25 தானிய வகைகள் மற்றும் வஸ்தரங்கள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. சேலம் கோட்டை பெருமாள் கோவில் பட்டாச்சாரியார் சுதர்சனம், பட்டாச்சாரியார் ஸ்ரீராம் குழுவினர், பட்டாபிஷேக நிகழ்ச்சியை நடத்தினர். விழா ஏற்பாடுகளை கோதண்டராமசாமி இறையருள் நற்பணி மன்றத்தின் தலைவர் மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !