மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் 6ம் நாளான நேற்று, தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருளினார். மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று முன்தினம் காலை 6.11 மணிக்கு, கள்ளர் திருக்கோலத்தில் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். விழாவின் 6ம் நாளான நேற்று காலை 6 மணிக்கு வண்டியூர் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஏகாந்த சேவை நடந்தது. பின், அங்கிருந்து சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்திற்கு சுந்தரராஜப் பெருமாள் சுவாமி காலை 11 மணிக்கு எழுந்தருளினார். மதியம் 3 மணிக்கு மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருளினார். மாலை 4 மணிக்கு அனுமார் கோயிலில் அங்கப் பிரதட்சணம், இரவு 12 மணி முதல் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரத் திருக்கோலம் நடந்தது. இங்கு இன்று (மே 16) காலை 6 மணிக்கு மோகினி அவதாரத்துடன் பக்தி உலாவுதல், பகல் 12 மணிக்கு அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்கத் திருக்கோலத்துடன் எழுந்தருளல், சேதுபதி மண்டபத்தில் இரவு 11 மணிக்கு திருமஞ்சனம் நடக்கிறது.