வெட்டிவேர் சப்பரத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள்!
காஞ்சிபுரம்: வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான நேற்று, வரதராஜ பெருமாள், வெட்டிவேர் சப்பரத்தில் திருவீதி உலா வந்தார். காஞ்சிபுரம் நகரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவம், கடந்த 12ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலையில், பல்வேறு உற்சவங்கள் நடந்தன. இந்த நிலையில், உற்சவத்தின் கடைசி நாளான நேற்று பிற்பகல் 2:30 மணிக்கு, கோவிலில் உற்சவருக்கு, த்வாதச ஆராதனை நடந்தது. மேலும், இரவு 7:00 மணிக்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெட்டிவேர் சப்பரத்தில், வரதராஜ பெருமாள் எழுந்தருளி, முக்கிய வீதிகளில் வீதியுலா சென்றார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். பின்னர், இரவு 10:00 மணிக்கு, வரதராஜர் மீண்டும் கோவிலை வந்தடைந்தார். பிரம்மோற்சவ உற்சவம், நேற்று முடிவடைந்தது. இதனை தொடர்ந்து, அடுத்த மூன்று நாட்கள் விடையாற்றி உற்சவம் நடக்க உள்ளது.