எல்லை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதலுடன் விழா துவக்கம்!
ராசிபுரம்: ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவிலில், நேற்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன், விழா துவங்கியது. ராசிபுரம்-புதுப்பாளையம் சாலையில் உள்ள எல்லை மாரியம்மன் மற்றும் பாலமுருகன் கோவிலில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 20ம் தேதி கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, நேற்று, காப்புக்கட்டி, பூச்சாட்டுதல் விழா நடந்தது. இன்று (22ம் தேதி) கம்பம் நடும் நிகழ்ச்சி, 25ம் தேதி, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, 26ம் தேதி இரவு, பூவோடு பற்ற வைத்தல், 27ம் தேதி, காலை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 28ம் தேதி காலை சக்தி அழைத்தல், பொங்கல் வைத்தல், அக்னி குண்டம் பற்றவைத்தல் ஆகியவை நடக்கிறது. அதேபோல், 29ம் தேதி காலை, பக்தர்கள் தீ மிதிக்கின்றனர். பின்னர், அம்மன் ஸ்வாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 30ம் தேதி, மாலை, 6 மணிக்கு, திருவிளக்கு பூஜை, இரவு, 7 மணிக்கு சத்தாபரணம் நடக்கிறது. தொடர்ந்து, 31ம் தேதி அதிகாலை, 2 மணிக்கு, கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, எல்லைமாரியம்மன் திருப்பணி குழு, நற்பணி மன்றம், வார வழிபாட்டு மகளிர் மன்றம் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.