திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்!
திருத்தணி : திரவுபதியம்மன் கோவில் திருவிழாவில், காலையில் துரியோதனன் படுகளமும், மாலையில் தீ மிதி திருவிழாவும் நடந்தது.திருத்தணி அடுத்த, பட்டாபிராமபுரம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா, கடந்த, 8ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும், காலையில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 1:30 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மகாபாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடந்தது.கடந்த, 16ம் தேதி, திரவுபதி திருக்கல்யாணமும், 18ம் தேதி சுபத்திரை அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை, 10:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.மாலை, 6:30 மணிக்கு, 700க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்தனர்.