உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழக கோவில்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு!

தமிழக கோவில்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு!

சென்னை: தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், குளங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில், இம்மாதம், 30ம் தேதிக்குள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தும்படி, அனைத்து கோவில் செயல் அலுவலர்களுக்கும், அறநிலையத் துறை கமிஷனர், தனபால் உத்தரவிட்டுள்ளார்.

மழை நீர் சேகரிப்பு: இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த, துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், கடந்த வாரம் நடந்தது. இதில், அறநிலையத் துறை கமிஷனர் தனபால் பேசியதாவது: சமீபத்தில் அனைத்து கோவில்களிலும், ஆத்மார்த்த உணர்வோடு, மழை வேண்டி யாகம் நடத்தினீர்கள்; அதன் பயனாக மழை பெய்தது. அதேபோல், ஆத்மார்த்த உணர்வோடு, கோவில், கோவிலுக்கு சொந்தமான குளங்கள், கோவில் அலுவலகம், பக்தர்கள் தங்கும் விடுதி, ஆகியவற்றில், மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துங்கள். மழைநீர் சேகரிக்க, பூமிக்கடியில் குறைந்தது, ஐந்து உறைகளை இறக்க வேண்டும். இதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்புங்கள். உடனடியாக நிதி ஒதுக்கப்படும். கோவில் வளாகத்தில் விழும் மழைநீரை முழுமையாக சேகரிக்க, தேவையான நடவடிக்கையை, இம்மாதம், 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். தமிழகத்தில், 36,488 கோவில்கள்; 56 திருமடங்கள் - அவற்றோடு இணைந்த கோவில் கள், 58; சமணர் கோவில்கள் 17 மற்றும் அறக்கட்டளைகள் உள்ளன. இவற்றில் முதல்கட்டமாக, நிதி வசதி கொண்ட, 4,500 கோவில்கள், அவற்றுக்கு சொந்தமான 1,500 குளங்கள், பக்தர்கள் தங்கும் விடுதி, அலுவலகம் உட்பட, 1,500 இடங்களில், மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.

துவக்க விழா: இதன் துவக்க விழா, நேற்று, பெரும்பாலான கோவில்களில் நடந்தது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, சித்திபுத்தி விநாயகர் கோவில், நுங்கம்பாக்கம் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில், மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த, அடிக்கல் நாட்டப்பட்டது. இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர்கள் கூறியதாவது: கோவில் வளாகத்தில் உள்ள, அனைத்து கட்டடங்களுக்கும், மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு, 4,000 - 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்; குளங்களுக்கு கூடுதல் செலவாகும். இதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பினால், உடனடியாக நிதி ஒதுக்குவதாக, கமிஷனர் தெரிவித்துள்ளார். எனவே, மதிப்பீடு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !