ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரூ.10.45 கோடியில் திருப்பணி துவக்கம்!
திருச்சி;திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. 2001ல், இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக, தமிழக முதல்வர் ஜெ., 10.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, திருப்பணிகளுக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து, நேற்று காலை, சுதர்சன யாகத்துடன், திருப்பணி துவங்கியது. தமிழக இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர், செந்துார்பாண்டி, திருப்பணியை துவக்கி வைத்தார். அமைச்சர் பூனாட்சி, இந்துசமய அறநிலையத் துறை கமிஷனர் தனபால், கோவில் உதவி கமிஷனர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைச்சர் செந்துார் பாண்டி கூறியதாவது: தமிழக முதல்வர் உத்தரவுப்படி, மாநிலம் முழுவதும், 5,000 கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், 10.45 கோடியில், ஆயிரங்கால் மண்டபம், சேஷராய மண்டபம் கல் சிற்பம் புனரமைக்கப்படும். தங்கக்கோபுரம், வெள்ளை கோபுரம், ராஜகோபுரம், வளாகத்திலுள்ள, 65 சன்னதி உள்ளிட்ட, 115 சன்னதி, 21 கோபுரம், ஏழு பிரகார மதில் சுவர்களில், மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும். கோயில் வளாகத்தில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு புதுப்பிக்கப்படும். நாள்தோறும், 500 ஊழியர் திருப்பணியில் ஈடுபட உள்ளனர். பணி விரைந்து முடிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.