அறநிலைய துறை பணியாளர் நியமனத்தில் பலே சுருட்டல்!
தமிழகத்தில், குறைந்த வருவாய் உள்ள கோவில்களில், பணியாளர் நியமனம் என்ற பெயரில், மிகப்பெரிய அளவில் முறைகேடு நடப்பது அம்பலமாகியுள்ளது. கோவில் பணத்தை, லஞ்சமாக அள்ளிய அதிகாரிகள் விசாரணையில் சிக்கியுள்ளனர். தமிழகத்தில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 36,488 கோவில்களில், 34,336 கோவில்கள் ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக, வருவாய் உள்ளவையாக வகைபடுத்தப்பட்டுள்ளன.
மோசடி: இதில், பெரும்பாலான கோவில்கள், குறைந்த வருவாய் உள்ள கோவில்களாக உள்ளன. இக்கோவில்களில் பராமரிப்பு மற்றும் நிர்வாக பணிக்கு, தனியாக பணியாளர்கள் நியமிக்கப்படுவதில்லை.இது போன்ற கோவில்களில் தங்களுக்கு வேண்டியவர்களையும், தங்களை நன்கு, கவனிப்பவர் களையும் பணியாளர்களாக நியமித்து அறநிலையத் துறையின் அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.இதிலும் குறிப்பாக, லஞ்சம் கொடுக்க வசதியில்லாதவர்கள் எனில், அவர்களுக்கு, 3 லட்சம் ரூபாய் நிலுவை சம்பளம் வரும் வகையில், நியமன உத்தரவுகள் வழங்கி, அத்தொகையை, லஞ்சமாக சில அதிகாரிகள் சுருட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அறநிலையத் துறை அண்மையில் அளித்த விவரம்:
அம்பலம்: கோவை மண்டல இணை ஆணையராக புகழேந்திரன் இருந்தபோது, ஆணையர் அனுமதி பெறாமல், 49 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தெரியவந்த பின் எடுக்கப்பட்ட, துறைரீதியான நடவடிக்கையால், இவர்கள் யாரும் இப்போது பணியில் இல்லை. மேலும், ஆணையர் உத்தரவுபடி, இந்த நியமனங்கள் குறித்த தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டது. இந்த பின்னணியில், திருச்சி மண்டல இணை ஆணையராக இருந்த புகழேந்திரன் அண்மையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டதன் வாயிலாக இந்த முறைகேடு விஸ்வரூபம் எடுத்துள்ளது.தமிழகம் முழுவதும், 150க்கும் மேற்பட்டோர், இவ்வாறு முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நியமனங்கள் வாயிலாக பல கோடி ரூபாய் அளவுக்கு லஞ்ச ஊழல் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
விசாரணை வருமா?: கோவில்களின் சொத்துகளில் இருந்து வரும் பணமே, பணியாளர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுவதால், இந்த மோசடி நியமனங்கள் வாயிலாக கோவில் பணத்தை லஞ்சமாக அதிகாரிகள் சுருட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது.எனவே, ஆணையர் அனுமதி இன்றி நடந்த மற்றும் சர்ச்சைக்குரிய வகையில் செய்யப்பட்ட பணி நியமனங்கள் குறித்த முழுமையான விசாரணைக்கு, தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.