போச்சம்பள்ளி வீரபத்திர ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம்!
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அயிலம்பட்டி ஸ்ரீவீரபத்திர ஸ்வாமி கோவில் மகாகும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, காலையில், யாகசாலை பூஜை, நாடி சந்தனம், ஹோமம், மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, கோபுர கலசத்துக்கு கும்பாபிஷேகம், விநாயகர், லிங்கேஸ்வரர், வீரபத்திர ஸ்வாமி, நவக்கிரஹ மூர்த்தி மஹாகும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், பெங்களூரூ, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, ஓசூர், சூளகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டு, நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இவ்விழாவையொட்டி, 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களின் நலன் கருதி, போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை, ஸ்ரீவீரபத்திர ஸ்வாமி கோவில் பங்குதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.