உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்தில் பாலாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்!

குன்றத்தில் பாலாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்!

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை 5:30 மணிக்கு, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானை, மூலவர் கரத்தில் உள்ள தங்க வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. காலை 6:00 மணிக்கு சுவாமி விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் சுமந்து வந்த பால சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு மதியம் 2:00 மணிவரை அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் பல்வகை காவடிகள் எடுத்து வந்தனர். முகத்தில் 12 அடி அகலம் கொண்ட வேலால் அலகு குத்தியும், ஏராளமானோர் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்து வந்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். பலர் 16 கால் மண்டபம் அருகே பூக்குழி இறங்கினர். காலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சன்னதி தெருவிலுள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு தங்க மயில் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான மொட்டையரசு திருவிழா இன்று நடக்கிறது. காலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்க குதிரை வாகனத்தில் சட்டத் தேரில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் எழுந்தருளுவார். அங்கு மொட்டையரசு திருவிழா முடிந்து, இரவு பூப்பல்லக்கில் கோயில் சென்றடைவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !