வள்ளலார் தாயார் சின்னம்மையாருக்கு இல்லம் திறப்பு!
பொன்னேரி : திருவருட்பிரகாச வள்ளலாரின் தாயார் சின்னம்மையார் பிறந்த இடத்தில், தருமசாலை, ஞானசபையுடன் கட்டப்பட்ட இல்லம், இன்று (11ம் தேதி) திறப்பு விழா காண்கிறது. திருவருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம், மருதூரில், 1823ம் ஆண்டு ராமய்யா - சின்னம்மையார் தம்பதியருக்கு ஐந்தாவது பிள்ளையாக பிறந்தார். பொன்னேரி அடுத்த, சின்னகாவணம் கிராமம், வள்ளலாரின் தாயார் பிறந்த இடமாகும். வள்ளலார் ஆறு மாத குழந்தையாக இருந்தபோது, தந்தையின் மரணத்தை தொடர்ந்து, சின்னம்மையார் தனது குழந்தைகளுடன் சின்னகாவணத்தில் தங்கியிருந்தார். வள்ளலாரும், ஒன்றரை ஆண்டுகள் சின்னகாவணம் கிராமத்தில் வசித்தார். சின்னம்மையார் நினைவாக, சின்னகாவணத்தில் நினைவு இல்லம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. அதில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், சத்திய தருமசாலை, சத்திய ஞானசபை ஆகியவை ஏற்படுத்தப்பட்டு உள்ளன. சின்னம்மையார் இல்ல திறப்பு விழா நிகழ்ச்சிகள் கடந்த, 4ம் தேதி முதல் நடந்து வருகிறது. இன்று (11ம்தேதி), தருமச்சாலை திறப்பு விழாவும், நாளை (12ம்தேதி), ஞானசபை திறப்பு விழா மற்றும் சத்திய ஞான தீபம் ஏற்றுவித்தலும் நடைபெறுகிறது.