உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை குருபெயர்ச்சி விழா!

நாளை குருபெயர்ச்சி விழா!

சென்னை: குருபெயர்ச்சியை முன்னிட்டு, நாளை அனைத்து சிவாலயங்கள் மற்றும் குருபகவான் கோவில்களில் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடக்கின்றன. நாளை மாலை, 5:57 மணிக்கு குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இடம் பெயர்கிறார். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிவாலயங்கள் மற்றும் குருபகவான் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. சென்னமல்லீஸ்வரர் கோவில் பாரிமுனை, தேவராஜ முதலி தெருவில் உள்ள சென்னமல்லீஸ்வரர் கோவிலில், நாளை காலை, 9:00 மணிக்கு சிறப்பு யாகத்துடன், நவக்கிரகம் மற்றும் 27 நட்சத்திர பூஜைகள் நடக்கின்றன. பின் சாந்தி மற்றும் ப்ரீதி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து கோபூஜை, சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை மற்றும் நவகலச பூஜைகள் நடக்கின்றன. மாலை 4:30 மணி முதல் இரண்டாம் கால பூஜையும், குருப்பெயர்ச்சி நடக்கவுள்ள 5:57 மணிக்கு நவக்கிரகங்கள் மற்றும் குருபகவானுக்கு கலசாபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து மகா

தீபாரதனை மற்றும் பிரசாத வினியோகம் நடைபெறும். மல்லிகேஸ்வரர் கோவில் மண்ணடி, லிங்கி செட்டி தெருவில் உள்ள மல்லிகேஸ்வரர் கோவிலில், நாளை மாலை 6:00 மணியளவில், சிறப்பு ஹோமமும், கலசாபிஷேகமும் நடக்கிறது. பின் குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனையும் நடக்கிறது. ஏகாம்பரேஸ்வரர் கோவில் தங்கசாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், நாளை மாலை 5:57 மணிக்கு சிறப்பு மகா அபிஷேகம், கலசாபிஷேகம், விசேஷ அலங்காரம் நடக்கிறது. ஹோமத்தில், மிதுனம், கடகம், மேஷம், ரிஷபம், துலாம், தனுசு மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு பரிகார பூஜைகள் நடக்கின்றன.

பரிகார ஹோமம்: பாரிமுனை அருகேயுள்ள ஆச்சாரப்பன் தெருவில் ஸ்ரீசாய்மந்திரில், ஜெய்வாசவி சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் நாளை மாலை குருபகவானுக்கான பரிகார ஹோமம் நடக்கிறது. விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம் மற்றும் மூல மந்த்ர ஹோமங்களும் நடக்கின்றன. பரிகாரம் செய்ய வேண்டிய ராசியினருக்கு பரிகார பூஜையும் நடக்கிறது. மேலும், வியாசர்பாடியில் உள்ள ரவீஸ்வரர் கோவில், மண்ணடியில் உள்ள கச்சாலீஸ்வரர் கோவில், திருவொற்றியூரில் உள்ள குருதட்சிணாமூர்த்தி கோவில், பாடி திருவலிதாயம் கோவில்களிலும் குருபெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !