ஆத்தூர் குரு பெயர்ச்சி பூஜை!
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில், குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடந்தது.ஆத்தூர் அருகே, தென்பொன்பரப்பி கிராமத்தில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, குருப்பெயர்ச்சியொட்டி, மூலவர் சொர்ணபுரீஸ்வரர், சொர்ணாம்பிகை, நந்தி தேவர், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.கோவிலின் தென்புறத்தில் உள்ள, தட்சிணாமூர்த்திக்கு, குருப்பெயர்ச்சியொட்டி சிறப்பு யாகம், பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் என, 16 வகையான அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டது.மாலை, 5.57 மணிக்கு, குரு பகவான் மிதுன ராசியில் இருந்து, கடக ராசிக்கு இடம் பெயர்ந்தார். அப்போது, தட்சிணாமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, சேலம், சின்னசேலம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபாட்டில் பங்கேற்றனர்.ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், வீரகனூர் கங்காசவுந்தரேஸ்வரர், வெங்கனூர் விருத்தாச்சலீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தது.