குருஷேத்திரம் ஆனது வீரமங்கலம் பாண்டவர்கள் அடித்தனர் செஞ்சுரி!
ஆர்.கே.பேட்டை: குருஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் நடந்த 18 நாள் போரின் கடைசி நாள் யுத்தம் நேற்று நடந்தது. இதில், கவுரவர்களில் மூத்தவர்களான துரியோதனன், துச்சாதனனை வீழ்த்தி, பாண்டவர்கள் வெற்றி கண்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, வீரமங்கலம், திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த உற்சவம் கடந்த 2ம் தேதி, பாரத கொடியேற்றத்துடன் துவங்கியது. 5ம் தேதி, வில் வளைப்பு, 9ம் தேதி மாலை, அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தினசரி மகாபாரத சொற்பொழிவு, தெருக்கூத்து நடத்தப்பட்டது, பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்குமான 18ம் நாள் போர் நேற்று காலை நடந்தது. ஏற்கனவே கவுரவர்களில் 98 சகோதரர்களை இழந்த துரியோதனன், நேற்றைய போரில், தம்பி துச்சாதனனுடன் களம் இறங்கி, பீமனின் தாக்குதலில் இறந்தான். இந்நிகழ்ச்சி தெருக்கூத்து கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டது.இந்த மகாபாரத நிகழ்வை காண, வீரமங்கலம், மரிக்குப்பம், மகன்காளிகாபுரம், ராம்ராஜி கண்டிகை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். மாலை 6:00 மணியளவில், தீமிதி திருவிழா நடந்தது. கவுரவர்கள் 100 பேரை வெற்றி கண்ட நிலையில், இன்று தர்மராஜா பட்டாபிஷேகம் நடக்கிறது.