சிவன்மலை கோவில் கும்பாபிஷேக விழா: ஆர்.டி.ஓ., நடத்திய கூட்டம் அதிகாரிகள் புறக்கணிப்பு!
காங்கேயம்: சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான, ஆர்.டி.ஓ., கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லை. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே புகழ் பெற்ற சிவன்மலை சுப்ரமணியசாமி மலை கோவில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், அதிக வருவாய் உள்ள முதல் நிலை கோவிலாகும். இக்கோவில் கும்பாபிஷேகம், வரும், நான்காம் தேதி நடக்க உள்ளது. இதில், ஒரு லட்சம் பேர் வரை பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகளை நடக்கிறது. இந்நிலையில், கடந்த, 18ம் தேதி, ஆர்.டி.ஓ., திவாகர் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அறநிலையத்துறை இணை ஆணையர், உதவி ஆணையர், காங்கேயம் டி.எஸ்.பி.,- அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர், உட்பட பல துறை அதிகாரிகள் பங்கேற்கவில்லை. இதனால், முக்கிய முடிவு ஏதும் எடுக்காமல், 20ம் தேதி கூட்டம் நடத்தப்படும் என்றும், அன்று அனைத்து துறை அதிகாரிகளும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும், என ஆர்.டி.ஓ., கூறிச் சென்றார். அதன்படி, 20ம் தேதி நடந்த கூட்டத்திலும், அறநிலையத்துறை செயல் அலுவலர் நந்தகுமார், ஒரு போலீஸ் எஸ்.ஐ., உட்பட மிகச்சில அதிகாரிகளே பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தின்போது, அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் மலை மேல் குவிவர். நெரிசலை தவிர்க்கவும், போக்குவரத்து ஏற்பாடு செய்தல், போலீஸ் பாதுகாப்பு வழங்குதல் போன்றவைகள் குறித்து முழுமையான முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது. இருப்பினும், மலை மீது பக்தர்கள் டூவீலரில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக, ஐந்து பஸ்கள் மலைக்கு இயக்க முடிவு செய்யப்பட்டுது. அனைத்து துறை அதிகாரிகளும் இரு கூட்டத்திலும் பங்கேற்று இருந்தால், அனைத்து முடிவுகளையும் முன்னதாகவே எடுத்து, பாதுகாப்பாக கும்பாபிஷேகத்தை நடத்த வாய்ப்பு ஏற்பட்டிருக்கும், என வருவாய்த்துறையினர் புலம்பி சென்றனர்.