உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு யாகம்!

உடுமலை கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு யாகம்!

உடுமலை: உடுமலை அருகே ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட கோவிலில், போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு யாகம் மற்றும் வழிபாடுகள் நேற்று நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். உடுமலை அருகே பெதப்பம்பட்டியில், பகவதி யம்மன்கோவிலில், தண்டாயுதபாணி கோவில் <உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்தது. கோவிலுக்கு சொந்தமான ஏழு ஏக்கர் நிலம் அப்பகுதியில் உள்ளது. இந்நிலம் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள், கோவிலில் நிலத்தை மீட்டு, திறந்தவெளியில் காணப்படும் சாமி சிலைகளை பராமரித்து, பூஜைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோவில் வழிபாட்டு மன்றம் சார்பில், மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. நில அபகரிப்பு தடுப்பு போலீசில் ஆக்கிரமிப்புகள் குறித் விசாரணையும் மேற் கொள்ளப்பட்டது. இந்நிலையில், திறந்த வெளியில் காணப்பட்ட பழமையான சிலைகளுக்கு, தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டு, பக்தர்கள் சார்பில், பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், பிரத்தியங்கிரா மகாயாகம் நடத்த வழிபாட்டு மன்றம் மற்றும் பக்தர்கள் சார்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த யாகத்திற்கு கோவில் நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயன்றவர்களால், பாதிப்பு ஏற்படும் என குடிமங்கலம் போலீசில், பக்தர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, நேற்று காலை துவங்கிய யாகத்திற்கு போலீசில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. போலீசில் பாதுகாப்புடன் நடத்த யாகம் மற்றும் சிறப்பு பூஜைகளில் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !