பலத்த பாதுகாப்புடன் புரி ஜெகநாதர் ரத யாத்திரை துவக்கம்!
புரி: பிரசித்தி பெற்ற புரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று துவங்கியது. ஒடிசா மாநிலம் புரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெகநாதர் கோவிலில், ஆண்டு தோறும் நடக்கும் ரத யாத்திரை, மிகவும் பிரபலமானது. இந்தாண்டுக்கான ரத யாத்திரை, கோலாகலமாக நேற்று துவங்கியது. உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்றனர். யாத்திரையின்போது, பக்தர்கள் ரதத்தின் மீது ஏறுவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு காரணமாக சர்ச்சை எழுந்தது.இதன் காரணமாக, ரத யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 10 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதுதவிர, கடல் மற்றும் வான் வழியிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஜெகநாதர் கோவிலும், நேற்று ரத யாத்திரை துவங்கியது. கடந்த, 12 ஆண்டுகளாக, அங்கு முதல்வராக இருந்தபோது, நரேந்திர மோடி, ரதம் செல்லும் பாதையை சுத்தம் செய்து, யாத்திரையை துவக்கி வைத்தார். இந்தாண்டு, முதல்வர் ஆனந்தி படேல், வீதியை சுத்தம் செய்து, ரத யாத்திரையை துவக்கி வைத்தார். ரத யாத்திரை சிறப்பாக நடக்க பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.