சிதம்பரம் நடராஜர் ஆயிரங்கால் மண்டபத்தில் பள்ளி மாணவர்கள் உழவாரப்பணி!
சிதம்பரம்: ஆனித்திருமஞ்சனத்தையொட்டி நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் இந்து ஆலய பாதுகாப்பு குழு மற்றும் பள்ளி மாணவர்கள் உழவாரப்பணியில் ஈடுப்பட்டனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம் உற்சவத்தையொட்டி வரும் 3ம் தேதி தேரோட்டமும், 4ம் தேதி தரிசனம் உற்சவம் நடக்கிறது. சிவகாமி சுந்தரி அம்மன் சமேத நடராஜர் சுவாமிகள் தேரில் இருந்து இறங்கி, அன்று மாலை ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் இரவு லட்சார்ச்சனை, அதிகாலை மகா அபிஷேகம், காலை திருவாபரண அலங்காரம், மகா அர்ச்சனை போன்றவை நடக்கிறது. அதனால் ஆயிரங்கால் மண்டபத்தில் சிதம்பரம் இந்து ஆலய பாதுகாப்பு குழு மற்றும் ராமகிருஷ்ணா வித்யசாலா பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் உழவாரப்பணிகள் மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியில் இந்து ஆலய பாதுகாப்புக் குழு தலைவர் செங்குட்டுவன் தலைமையில் ஜோதி குருவாயூரப்பன், நாச்சியப்பன், சங்கரமூர்த்தி, மகளிர் அணி செல்வி உள்ளிட்ட பல நிர்வாகிகள், ராமகிருஷ்ணா பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மற்றும் பக்தர்கள் செய்தனர். உழவாரப்பணியில் ஆயிரங்கால் மண்டபம் முழுவதும் ஒட்டடை அடித்து தரை பெருக்கி குப்பைகளை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் தண்ணீர் அடித்து சுத்தம் செய்தனர். மேலும் ஆயிரங்கால் மண்டபம் சுற்றியுள்ள செடி, கொடிகள் அகற்றி சுத்தம் செய்தனர். இதனால் ஆயிரங்கால் மண்டபம் பளிச் என காணப்படுகிறது.