பாரியூர் அமரபணீஸ்வரருக்கு ஆனி திருமஞ்சன உற்சவ விழா
கோபிசெட்டிபாளையம்: கோபி, பாரியூர் அமரபணீஸ்வரர் கோவிலில், ஆனித்திருமஞ்சன உற்சவ விழா, நாளை கோலாகலமாக நடக்கிறது. கோபி தாலுகா, பாரியூர், பச்சமலை, பவளமலை, என ஏராளமான புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. கோபியில் இருந்து, அந்தியூர் செல்லும் சாலையில், இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாரியூரில், வயல்களுக்கு நடுவே, கொண்டத்து காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், அமரபணீஸ்வரர் மற்றும் ஆதிநாராயணப்பெருமாள் கோவில்கள் உள்ளன. இதில், அமரபணீஸ்வரர் கோவிலில், ஆனித்திருமஞ்சன உற்சவ திருவிழா ஜூலை, மூன்றாம் தேதி விமர்சையாக நடக்கிறது. சிவகாமியம்மாள் உடனமர் ஸ்ரீநடராஜ மூர்த்திக்கு, இரு வேளையும் லட்சார்ச்சனை, மகா தீபாராதனை நடக்கிறது. வரும், நான்காம் தேதி காலை, ஏழு மணிக்கு மகன்யாச அபிஷேகம், எட்டு மணிக்கு மகா தீபாராதனை, மாலை ஆறு மணிக்கு, தேர்வீதி திருவுலா காட்சி நடக்கிறது. தக்கார் மற்றும் உதவி கமிஷனர் சபர்மதி மற்றும் செயல் அலுவலர் மாலா, ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.