உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பண்ண சுவாமிக்கு தலைசுமையாய் பூஜைபொருள்: பக்தர்கள் நேர்த்தி!

கருப்பண்ண சுவாமிக்கு தலைசுமையாய் பூஜைபொருள்: பக்தர்கள் நேர்த்தி!

திருப்புவனம் : திருப்புவனம் அருகே சொக்காநாதிருப்பு கோயிலில், 23 ஆண்டுகளுக்கு பின் நடக்கும், விழாவிற்கு பக்தர்கள் பூஜைக்கானபொருட்களை 25 கி.மீ., தூரம் தலைசுமையாய் எடுத்துவந்தனர். சொக்கநாதிருப்பு கிராம எல்லை காவல் தெய்வம் வாடி கருப்பண்ணசாமி. இக்கோயில் வழிபாடு, 23 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு, இரு தரப்பினரும் வழிபட துவங்கியுள்ளனர். கடந்த 2 நாட்களாக, கோயிலில் சாமி கும்பிட்டு வருகின்றனர். இங்குள்ள, கருப்பண்ண சுவாமிக்கு நேர்த்திகடன் மாலைகளை, தலை சுமையாய், பக்தர்கள் கொண்டு வருவது வழக்கம். இங்கு, 23 ஆண்டாக சாமி கும்பிடு நடக்காமல், மீண்டும் நடப்பதால், இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நடை பயணம்: இக்கோயிலுக்காக, மதுரையில் இருந்து, பூஜைக்குரிய பொருட்கள், மாலைகளை தலை சுமையாய் கொண்டு வந்தனர். இதற்காக 10 நாள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். நேற்று காலை 10:30 மணிக்கு, மதுரையில் இருந்து கிளம்பிய பக்தர்கள், பகல் 2 மணிக்கு திருப்புவனம் வந்தனர். இது குறித்து பக்தர் நேரு கூறுகையில்,“ பூக்கடையில் இருந்து தலை சுமையாய் கிளம்பி, எங்கும் நிற்காமல் அல்லிநகரம் தண்டீஸ்வரர் சன்னதியில் நிறுத்தினோம். இடையில் சுமையை மாற்றுவோமே தவிர இறக்குவதில்லை. அல்லிநகரத்தில் சாமியாட்டம் நடந்த பின் மீண்டும் கிளம்பி, இரவு சொக்கநாதிருப்பு செல்வோம், விடிய விடிய சாமியாட்டம் நடக்கும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !