பழமையான கோவில் சீரமைக்கப்படுமா?
தண்டையார்பேட்டை : தண்டையார்பேட்டையில் உள்ள, 400 ஆண்டுகள் பழமையான அம்மன் கோவில், பராமரிப்பு இன்றி பாழாகிறது. தண்டையார்பேட்டை, சேணியம்மன் நகரில், 400 ஆண்டு பழமை வாய்ந்த, சேணியம்மன் கோவில் உள்ளது. அங்கு, ஆடி மாத உற்சவம், சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இரண்டு மாதங்களுக்கு முன், கோவிலுக்கு செல்லும் பாதையில், குடிநீர் வாரியம், குழாய் பதிக்கும் பணியை மேற்கொண்டது. பணி முடிக்கப்பட்டும், சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால், கோவிலுக்கு செல்லும் ஒரே பாதை, சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.அதோடு, கோவிலில் உள்ள பல சன்னிதிகள், புதர் மண்டி காணப்படுகின்றன. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவிலாக இருந்தாலும், முன்பு நடந்த பல சீரமைப்பு பணி, உபயதாரர் மூலமே நடந்துள்ளது.விரைவில் நடைபெறும் ஆடி உற்சவத்திற்குள், கோவிலுக்கு செல்லும் சாலையையாவது சீர்படுத்த வேண்டும் என, சேணியம்மன் நகர் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.