63 நாயன்மார் பெருவிழா ஆக., 3ம் தேதி துவக்கம்!
ராசிபுரம்: ராசிபுரத்தில், 63 நாயன்மார்கள் பெருவிழா, ஆகஸ்ட், 3ம் தேதி துவங்குகிறது. ராசிபுரம், கைலாசநாதர் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில், 11ம் ஆண்டாக, 63 நாயன்மார் பெருவிழா மற்றும் பிச்சாடனர் ஐம்பொன் திருமேனி திருப்பணி பெருவிழா, ஆகஸ்ட், 3ம் தேதி நடக்கிறது. காலை, 7 மணிக்கு கோவிலின் வெளிப்பிரகாரஸ்வாமிகளான, விநாயகர், முருகன், நந்தியம்பெருமாளுக்கு அபிஷேகம் நடக்கிறது. மாலை, 4 மணிக்கு தர்மசம்வர்த்தினி, கைலாசநாதர், 63 நாயன்மார் ஸ்வாமிக்கு திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து பேரொளி வழிபாடு மற்றும் திருமுறை பாராயணம் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு மேல் பவானி சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை பெரியபுராண ஆசிரியர் ஜானகிராமன் சொற்பொழிவு ஆற்றுகிறார். ஆகஸ்ட், 4ம் தேதி, காலை 8 மணிக்கு, கோவிலில் இருந்து, பூக்கடைவீதி கொங்கு திருமண மண்டபத்திற்கு, சிவனடியார் அழைக்கப்படுகின்றனர். விழாவை, உமாபதி மற்றும் சிற்றம்பல குரு ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். காலை, 10 மணி முதல் மதியம், 1 மணி வரை, பல்வேறு தலைப்பில் சைவ சித்தாந்த பேராசிரியர், ஓதுவார் மூர்த்திகள் சொற்பொழிவு ஆற்றுகின்றனர். மாலை, 6 மணிக்கு, ஐம்பெரும் மூர்த்தி, பிச்சாடனர், 63 நாயன்மார் ஸ்வாமி ஆகியோர், கயிலாய வாத்தியம் முழங்க, ராஜவீதி வழியாக திருவீதி உலா நடக்கிறது.