செஞ்சி சிறுகடம்பூர் கோவிலில் ரேணுகாம்பாள் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :4224 days ago
செஞ்சி: செஞ்சி ரேணுகாம்பாள் கோவிலில் கும்பாபிஷேக நான்காம் ஆண்டு நிறைவையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. செஞ்சி சிறுகடம்பூர் வடக்கு பார்த்த அம்மன் எனும் ரேணுகாம்பாம்பாள் கோவிலில் மகா கும்பாபிஷேக நான்காம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக அன்று காலை கலச பிரதிஷ்டை செய்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. அம்மனுக்கு விசேஷ திரவிய அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்தனர். மாலை 7 மணிக்கு ரேணுகாம்பாளுக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. ஊஞ்சல் சேவையின் முடிவில் அம்மனுக்கு மகா புஷ்பாஞ்சலி செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சிறுகடம்பூர் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.