உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமன் வனவாசம் எத்தனை ஆண்டுகள்?

ராமன் வனவாசம் எத்தனை ஆண்டுகள்?

அம்பத்துார் : ஒருவருக்கு தவ வலிமை இருந்தால் உயிர் பிரியும் நிலையில் கடவுளை காண முடியும் என்பதை, ராமனால் கொல்லப்பட்ட வாலியின் இறுதி நொடிகளில் இருந்து அறிய முடிகிறது, என, மரபின் மைந்தன் முத்தையா பேசினார். சென்னை, அம்பத்துார் கம்பன் கழகத்தின் 68வது நிகழ்ச்சி, அங்குள்ள வெங்கடாபுரம் திருமால் திருமண மண்டபத்தில், கழக தலைவர் பழ.பழனியப்பன் தலைமையில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. அதில், மரபின் மைந்தன் முத்தையாவிற்கு, தமிழ்ச்சுடர் விருது வழங்கப்பட்டது. பின் கம்பனில் தவம் என்ற தலைப்பில், மரபின் மைந்தன் முத்தையா பேசியதாவது: ஒருவர் தன் வேலையை சீராக செய்வதே தவம் எனப்படுகிறது. தவம், தியானம் செய்தால் வாழ்க்கை நெறிமுறைப்படுத்தப்படும். கைகேயி சொன்னதால்தான் ராமன் தவக்கோலம் பூண்டான். ஆனால், பரதனோ அதை அறிந்து தவம் பூண்டான். அதனால்தான், பரதன் தவத்தில் உயர்ந்தவனாய், குகனுக்கு தெரிந்தான். ராமன் 13 ஆண்டுகள், 2 மாதம் வரை காட்டில் தவம் செய்தான். 10 மாதம் மட்டுமே சீதையை தேடினான். ஆனால் வழக்கில், ராமன், ௧௪ ஆண்டுகள் வனவாசம் சென்றதாக, சொல்வர். ராமன் மறைந்திருந்து வாலியைக் கொன்ற போதும், ராமனை அனைத்துமாக கண்டான் வாலி.இங்கு, தவவலிமை இருந்தால் மட்டுமே, உயிர் பிரியும் நிலையிலும் கடவுளைக் காணமுடியும் என்கிறார், கம்பன். இல்லாவிட்டால் கடவுளே நேரில் வந்தாலும் நம்மால் அறிய முடியாது. வாலியின் தவவலிமையால் ராமன் அனைத்துமாக தெரிந்தான்.இவ்வாறு அவர் சொற்பொழிவாற்றினார்.

கம்பனில் வாழ்வியல் நெறிகள் என்ற தலைப்பில், ரம்யா அசோக் பேசியதாவது: நாம் பொதுவாக நமக்கு கொள்ளி போடவும், நமது சொத்துகளை பராமரிக்கவும் பிள்ளைகள் வேண்டும் என்கிறோம். ஆனால் பிள்ளைகள், பிறக்கும் போதே பொது நல நோக்கோடு பிறக்க வேண்டும் என்கிறார் கம்பர்.அதைத்தான் இந்த சமூகத்தை காக்கவும், ரட்சிக்கவும் பிள்ளை வேண்டும் என்று, தசரதன் மூலம் கூறுகிறார். அதேபோல், ராவணன் அழிவின் விளிம்பில் இருந்த போது, அதற்கு முன்பாக சினமும், தீமையும் அழிந்து மனிதனாக இறந்தான். தவறுகளை திருத்திக் கொள்ளவும், முழு மனதுடன் ஒப்புக்கொள்ளவும் மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு ரம்யா அசோக் பேசினார். நிகழ்ச்சியில் கம்பன் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பகுதிவாசிகள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !