மதுரையில் .. பிட்டுக்கு மண் சுமக்கும் வைபவம்!
மதுரை: மதுரையில் ஆவணி மூலத்தையொட்டி, பிட்டுக்கு மண் சுமக்கும் வைபவம் நடக்கிறது. மதுரையிலுள்ள தெருக்களுக்கு ஆடிவீதி, சித்திரை வீதி, மாசி வீதி என மாதங்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால், ஆவணி மாதத்தைக் கொண்ட வீதிக்கு மட்டும் ஆவணி மூலவீதி என ஒரு நட்சத்திரத்தின் பெயரையும் இணைத்து பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஏன் தெரியுமா? ஆவணி மூலம் நட்சத்திர தினம். இந்த உலகத்துக்கு நல்லதோ அல்லது கெடுதலோ செய்யப் போகும் முக்கிய நாளாகும். இந்த நாளில் இருக்கும் சீதோஷ்ணத்தைப் பொறுத்தே உலகின் இயற்கை சூழ்நிலை மாறும். இன்று அதிகாலை சூரிய உதயத்தின் போது, அதை மேகம் மறைத்திருந்தால் கடுமையான மழை பெய்து வெள்ளச்சேதம் உண்டாகும்.
பிரகாசமாக சூரியன் இருந்தால், வெயில் சுட்டெரித்து தண்ணீர் பஞ்சம் வந்து விடும். இதில் எது நடந்தாலும் சிரமம் தான். இதில் இருந்து நம்மைக் காக்க வல்லவர் இறைவன் மட்டுமே. எனவே, அழிக்கும் கடவுளான சிவபெருமானை இன்று சரணடைந்து வழிபட்டால், நல்ல சீதோஷ்ண நிலை உண்டாகி உயிர்கள் நலம் பெறும். ஆவணி மூல நாளில் முதியவள் வந்தியம்மைக்கு அருள்புரிய சுந்தரேஸ்வரர் புட்டுத்தோப்பு சொக்கநாதர் கோயிலுக்கு எழுந்தருள்கிறார். கூலியாளாக வந்து, பிட்டுக்கு மண் சுமக்கும் திருவிளையாடலை நிகழ்த்துகிறார். இந்நாளில், மீனாட்சி சுந்தரேஸ்வரரை மனதார வணங்கி, அருமையான ஒரு சீதோஷ்ணத்தை தர வேண்டுவோம்.