பழநி திருஆவினன்குடியில் கும்பாபிஷேகம் : போலீஸ் பாதுகாப்பு!
பழநி : பழநி திருஆவினன்குடிகோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், யாகசாலையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடான திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேக விழாஆக.,22 ல் யாகசாலை முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. தொடர்ந்து கோயில் மயில் மண்டபம், உட்பிரகாரங்களில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு செப்.,1 ல் கணபதிஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்றுமுன்தினம் முதற்கால யாகபூஜைகள் துவங்கி, தொடர்ந்து சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்களை ஓதுகின்றனர். நாளை அதிகாலை 4 மணிக்கு ஆறாம்கால யாகசாலை பூஜையும், அதன்பின் காலை 6.30 மணிக்கு திருஆவினன்குடி ராஜகோபுரம், உட்பிரகார விமானங்கள், சன்னதிவீதி வேளீஸ்வரர் கோயில்விமானத்திற்கு மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 6.40 மணிக்கு மூலஸ்தான குழந்தை வேலாயுதசுவாமி, வேளீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடக்கிறது.போலீஸ் பாதுகாப்பு: மயில்மண்டபத்தில் அமைக்கப் பட்டுள்ள, பிரதான யாகசாலைகளில் தங்கம் மற்றும் வெள்ளியிலான கும்பங்கள் வைக்கப்பட்டு, அவை தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் உள்ளனர். சன்னதிவீதி, குளத்துரோடு, ஜவஹர்வீதியில் குவியும் பக்தர்கள்கும்பாபிஷேகத்தை காண்பதற்காக, மெகா சைஸ் 4 எல்.இ.டி., மானிடர்கள் வைக்கப் பட்டுள்ளது. ஏற்பாடுகளை பழநிகோயில் இணைஆணையர்(பொ) ராஜமாணிக்கம், உதவிஆணையர் மேனகா ஏற்பாடுசெய்துள்ளனர்.