உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடத்தப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் சிலையை காண மக்கள் ஆர்வம்!

கடத்தப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் சிலையை காண மக்கள் ஆர்வம்!

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் திருடுபோன ஆயிரத்து நுõறு ஆண்டுகள் பழமையான அர்த்தநாரீஸ்வரர் சிலை, நாளை 12ம் தேதி தமிழகம் கொண்டு வரப்படுகிறது.

விபசித்து முனிவர் பிரதிஷ்டை : விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆயிரத்து ஐநுõறு ஆண்டுகளுக்கு முன் விபச்சித்து முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பத்தாம் நுõற்றாண்டு முதல் கண்டராதித்த சோழன், ராஜராஜசோழன் காலத்தில் தேரோடும் திருச்சுற்று, கைலாய திருச்சுற்று (ஹைட் துரை), வன்னியடி திருச்சுற்று, அறுபத்து மூவர் திருச்சுற்று, பஞ்சவர்ண திருச்சுற்று என ஐந்து திருச்சுற்றுகள்; கிழக்கு கோபுரம், மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்; ஐந்து திருநந்தி, ஐந்து கொடிமரம் என ஐந்தின் சிறப்புகளாக அமைக்கப்பட்டது.

சிலை கடத்தல் : கோவிலில், அறுபத்து மூவர் திருச்சுற்றில் (பிரகாரம்) சண்டிகேஸ்வரர் சுவாமி சன்னதிக்கு எதிரில், கண்டராத்தித்த சோழன் காலத்தில் ஆயிரத்து நுõறு ஆண்டுகளுக்கு முன், அர்த்தநாரீஸ்வரர் சிலை அமைக்கப்பட்டது. இந்த பழமையான அர்த்தநாரீஸ்வரர் சிலையின் இடது கை சேதமானதால், அந்த சிலையை கடந்த 2002ம் ஆண்டு எடுத்துவிட்டு, அங்கு வேறு அர்த்தநாரீஸ்வரர் சிலை அமைத்தனர். புது சிலை வைத்த பிறகு, பழைய சிலையை யாரும் கண்டு கொள்ளாததால், அதனை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர்.

ஜெர்மனில் கைது: இந்நிலையில், ஜெர்மனில் கடந்த 2011 அக்டோர் 30ம் தேதி சிலை கடத்தல் வழக்கில் கைதான சுபாஷ் சந்திர கபூர் வாக்குமூலத்தில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அர்த்தநாரீஸ்வரர் சிலை கடத்தப்பட்டது தெரிந்தது. இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன், கடந்த 2012, ஜூலை மாதம் கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் பதிந்த வழக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் அலுவலர்கள், ஊழியர்கள், திருப்பணிக் குழுவினர்களிடம் கடந்த டிசம்பரில் விசாரணை செய்தனர்.

ஆஸ்திரேலியாவில் அர்த்தநாரீஸ்வரர்: இந்நிலையில், ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த சிலை, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் திருடுபோன அர்தநாரீஸ்வரர் சிலை என்பது தெரிந்தது. அதற்கான ஆதாரங்களை தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம், இந்திய அரசின் மூலமாக ஆஸ்திரேலியா அரசிடம் ஒப்படைத்தது.

பிரதமர் மோடியிடம்சிலை ஒப்படைப்பு: விருத்தகிரீஸ்வரர் கோவில் அர்த்தநாரீஸ்வரர் சிலை என உறுதி செய்ததை தொடர்ந்து, சர்வதேச போலீஸ் ஒப்புதலுக்குப் பின், ஆஸ்திரேலியா அருங்காட்சியத்தில் இருந்த அர்த்தநாரீஸ்வரர் மற்றும் அரியலுõர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கோவில் வெண்கல நடராஜர் சிலைகளை, அந்நாட்டு பிரதமர் டோனி அபோட், கடந்த 5ம் தேதி பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார். மத்திய அரசிடமிருந்து தமிழக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் சிலையை நாளை வெள்ளிக்கிழமை (12ம் தேதி) சென்னை கொண்டு வருகின்றனர்.

பொது மக்கள் கோரிக்கை: பழமலைநாதருக்கு (விருத்தகிரீஸ்வரர்) அதிக சக்தி இருப்பதாலேயே ஆஸ்திரேலியா கடத்தப்பட்ட சிலை, மீண்டும் விருத்தாசலத்திற்கே திரும்ப வருகிறது என விருத்தாசலம் பகுதி பொது மக்கள், பக்தர்கள் கூறுகின்றனர். அதனால் சிலையை காணவும், வழிபடவும் மக்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். அர்த்தநாரீஸ்வரர் சிலைக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கவும் முடிவு செய்துள்ளனர். கடத்தப்பட்ட சிலையை, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மீண்டும் பிரதிஷ்டை செய்து, வழிபட ஏற்பாடு செய்ய வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுந்தரம் அய்யர்
: பின்னமான சிலையை வழிபடக்கூடாது எனக் கூறுவதை ஏற்கமுடியாது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமைவாய்ந்த சிலை கோவிலுக்கு கொண்டு வந்த பின், புணர் பூஜை செய்து, புதிய சிலையுள்ள இடத்திற்கு அருகில் வைத்து, பொதுமக்கள் வழிபாட்டிற்காக ஏற்பாடு செய்ய வேண்டும்.

முன்னாள் எம்.பி., ராமநாதன்:
திருடுபோன சிலை விருத்தாசலத்திற்கு மீண்டும் கொண்டுவரப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது. கோவிலில் 20 அடி உயரத்தில் பிரம்மாண்ட சுற்றுச்சுவர் இருந்தும், சுவரை ஒட்டி அமைந்துள்ள மாடி வீடுகள் தான் கோவிலுக்குள் சமூக விரோதிகள் நுழைய வழி செய்கின்றன. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பாதுகாப்பை கருதாமல் கோவில் இடங்களை கட்டடம் கட்ட குத்தகைக்கு விட்டது தான் கோவில் சொத்துக்களுக்கே பாதிப்பாக உள்ளது. இதனால் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன அம்பாள் கோவில் தங்க கலசத்தை  இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது’ என ஆதங்கப்பட்டார்.

ராமச்சந்திரன்: சிலை பின்னமானதும் கோவில் நிர்வாகிகள் ஓரங்கட்டிவிட்டனர். இந்த சிலையின் மகத்துவத்தை ஆஸ்திரேலியா அரசு உணர்த்தியுள்ளது. ஊனம் என்பது வழிபடுபவர் மனதைப் பொறுத்தது; சிலையில் இல்லை. எனவே, சிலையை மீண்டும் வழிபாட்டிற்கு வைக்க வேண்டும்.

முருகன்:
  கடலுõர் பாடலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோவில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்களில் பின்னமான சிலைகள்   வழிபாட்டில் உள்ளன. ஆயிரம் ஆண்டிற்கு மேலான பழமை வாய்ந்த அர்தநாரீஸ்வரர் சிலையை வழிபாட்டிற்கு வைக்க வேண்டும். சிலையை விருத்தாசலம் கொண்டு வரும்போது, அதற்கு சிவனடியார்கள், பொது மக்கள் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளித்து, விழா எடுக்க ஏற்பாடு செய்யப்படும்’ என்றார்.

செயல் அலுவலர் கிருஷ்ணகுமார்:
ஆயிரத்து நுõறு ஆண்டுகள் பழமையான அர்த்தநாரீஸ்வரர் சிலை, புது டில்லியிலிருந்து சென்னை கொண்டு வரப்படுகிறது. அதனை தமிழக சிலை திருட்டுத் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பார்கள். சிலை திருட்டு வழக்கு கோர்ட்டில் உள்ளதால், விருத்தாசலம் மாஜிஸ்திரேட் கோர்ட் மூலம் கோவில் நிர்வாகத்திடம், சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் ஒப்படைப்பார்கள். சிலையை பக்தர்களின் பார்வைக்கோ அல்லது  வழிபாட்டிற்கோ வைப்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்யும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !