தேசிங்கு ராஜனின் குதிரை சமாதி சீரமைப்பு!
அவலூர்பேட்டை: கடலி கிராமத்தில் போர் நடந்த குளக்கரைப்பகுதியில் தேசிங்கு ராஜனின் நீலவேணி குதிரை சமாதியை சீரமைக்கும் பணி நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம் கடலி கிராமத்தில் நீலாம்பூண்டியிலிருந்து மேல்மண்ணூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் குளக்கரை பகுதி அருகில் ராஜாதேசிங்கிற்கும் ஆற்காட்டு நவாப்பிற்கும் போர் நடந்தது. அப்போது தேசிங்கின் நீல வேணி குதிரையும், அவரது நண்பர் மகமத்கானும் உயிரிழந்தனர். அந்த இடத்தில் இரு குதிரைகளின் சமாதிகள் மற்றும் மகமத்கானின் சமாதி ஆகியவை உள்ளன. சற்று தொலைவில் தேசிங்கு வீர மரணமடைந்த இடம் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த இடத்தில் அமைந்துள்ள நீலவேணி குதிரையின் சமாதி சேதமடைந்த நிலையில் இருந்தது. வரும் அக்., 3 ம்தேதி தேசிங்கு ராஜனின் 300 வது நினைவு நாள் வருகிறது. அவரது வம்சா வழியை சேர்ந்த செஞ்சி தாலுகா பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் பாபு உதயசிங், பிரதாப்சிங் பிரசன்னா ஆகியோர் 25 ஆயிரம் ரூபாய் திட்ட மதிப்பில், நீலவேணி குதிரையின் சமா தியை சீரமைக்கும் பணியினை மேற்கொண்டனர். ஊராட்சி தலைவர் ஏழுமலை, வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் உடனிருந்தனர்.