திருமலையில் பக்தர்களுக்காக நகரும் நாற்காலிகள்!
திருப்பதி: திருமலையில் நேற்று, பக்தர்களின் வசதிக்காக, நகரும் நாற்காலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.திருமலையில், பக்தர்கள் தங்கும் ஓய்வு அறைகளில் உள்ள படிகளில் ஏறி இறங்க, வயதானவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது, அவர்களின் வசதிக்காக, ஓய்வு அறைகளின் முன் உள்ள படிகளின் இரு புறமும், மின்சாரத்தில் இயங்கும், நகரும் நாற்காலிகளை தேவஸ்தானம் அமைத்து உள்ளது.
பக்தர்கள் இதில் அமர்ந்து, பட்டன்களை அழுத்தினால், நாற்காலிகள் மேலும் கீழும் நகரும். இதன் மூலம், வயதான பக்தர்களும், மூட்டு வலி உள்ளவர்களும், படிகளில் ஏறி இறங்காமல், எளிதாக செல்ல முடியும்.தற்போது, பக்தர்கள் தங்கும் மண்டபம் 2ல் உள்ள, மாதவ நிலையம் படிகளில், இரண்டு நாற்காலிகளை தேவஸ்தானம் அமைத்துள்ளது. மேலும், வெகு விரைவில் திருமலையில் உள்ள, அனைத்து ஓய்வு அறைகளின் படிகளிலும், இந்த நகரும் நாற்காலிகள் பொருத்தப்படும் என, தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.