உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி ஒப்பாரி பெண்கள் சிறப்பு வழிபாடு

மழை வேண்டி ஒப்பாரி பெண்கள் சிறப்பு வழிபாடு

லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அருகே மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தி பெண்கள் ஒப்பாரி வைத்த, சில மணி நேரத்தில் மழை கொட்டி தீர்த்ததால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை தெற்கே அமைந்துள்ள கிராமங்கள் அனைத்தும் வானம் பார்த்த பூமியாக உள்ளது. பருவகாலங்களில் மழை பெய்தால் மழையை பயன்படுத்தி பயிர்கள் சாகுபடி செய்வது வழக்கம். கடந்த சில ஆண்டாக பருவமழை தவறியதால் மானாவாரி விவசாயமும் பெருமளவு பாதிக்கப்பட்டது. மானாவாரி நிலங்கள் அனைத்தும் தரிசுகாடுகளாக கிடக்கிறது. இந்நிலையில் லாலாப்பேட்டை அடுத்த கே. புதுப்பட்டியில் கிராம மக்கள் மழை வேண்டி வழிபாடு நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து மக்கள் லாலாப்பேட்டை அடுத்த கருப்பத்தூர் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி தீர்த்தகுடம் கொண்டு சென்றனர். பின்னர் கே.புதுப்பட்டியில் உள்ள மகாமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து லட்சுமணம்பட்டி பாமலாயிம்மன், பழைய ஜெயங்கொண்டம் மலையாளசாமி, கள்ளுக்கட்டை பிள்ளையார், சடையாண்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரவு கே.புதுப்பட்டியில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வீடு வீடாக சென்று சாப்பாடு வாங்கி வந்தனர். பின்னர், கோவிலின் முன் வருணபகவானுக்கு படையல் போட்டு மழை வேண்டி பெண்கள் ஒன்று கூடி ஒப்பாரி வைத்து அழுது பிரார்த்தனை செய்தனர். ஒப்பாரி நடந்து கொண்டிருந்த போதே கே.புதுப்பட்டி, குப்புரெட்டிப்பட்டி, ஓமாந்தூர், மேட்டு மகாதானபுரம், மகாதானபுரம், லாலாப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இடியுடன் கூடிய மழை ஒருமணி நேரம் கொட்டித் தீர்த்ததால் விவசாயிகள் உட்பட அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !