உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு பந்தக்கால் நடவு!

திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு பந்தக்கால் நடவு!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவிற்கான பூர்வாங்க பணி தொடங்க, பந்தக்கால் நடவு செய்யப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, வரும் நவம்பர், 26ம் தேதி கொடியற்றத்துடன் துவங்க உள்ளது. இதனை தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் தீப திருவிழா நாட்களில், ஒவ்வொரு நாளும், காலை மற்றும் இரவு என, இருவேளைகளிலும், பல்வேறு வாகனங்களில், பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி, வீதியுலா வருவர். இவ்வாகனங்கள் பழுது பார்த்தல், அழைப்பிதழ் அச்சிடுதல், தீபம் ஏற்ற நெய் கொள்முதல், வாகனங்களுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பூர்வாங்க பணிகளை தொடங்க, நேற்று, பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, கோவில் நடை திறக்கப்பட்டு, தங்க கொடி மரத்தின் அருகில் உள்ள சம்பந்த விநாயகர், அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் வீதியுலா வரும் தேர்களுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு ராஜகோபுரம் முன் அதிகாலை, 6.15 மணிக்கு பந்தக்கால் நடப்பட்டது. விழாவில், கோவில் இணை ஆணையர் செந்தில்வேலவன், பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !