உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாணவன் நினைத்தால் ..

மாணவன் நினைத்தால் ..

கல்வியால் மட்டுமே மனிதன் மனிதனாக முடியும். கல்வி எப்படி மனிதனை உருவாக்குகிறதோ அப்படியே அவன் வளர்கிறான். கல்வியும், மனிதவாழ்க்கையும் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளன. உண்மையான கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பது மட்டுமல்ல. அது மனதின் இயல்பான ஆற்றலை வளரச் செய்ய வேண்டும். மனிதனை திறம்பட சிந்திக்கத் துõண்டுவதாக அமைய வேண்டும். வாழ்க்கைக்கான பொருள் தேடுவதற்கான வழிமுறையாக கல்வி மாறிவிட்டது. மனித வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக மாறி விட்டது. மனப்போராட்டம், குடும்பம், சமூகப்பிரச்னையை மனிதன் சந்திக்க வேண்டியிருக்கிறது. இதற்கான தீர்வை நோக்கி வழி காட்டுவதாக கல்வி அமைய வேண்டும். உலகியல் அறிவைப் பெறுவதோடு, கல்வி ஆன்மிக அறிவையும் மாணவர்களுக்கு போதிக்க வேண்டும். முழுமையான கல்விக்கு இரண்டுமே அடிப்படையானது. இந்த அடிப்படையில் படித்தால், ஒரு மாணவன் நினைத்ததை நடத்திக் காட்டுவான். மனிதனிடம் இருக்கும் நிறைநிலையை வெளிப்படுவதே கல்வியின் குறிக்கோள் என்று விவேகானந்தர் குறிப்பிடுகிறார். பண்பு, திறமை, தகுதி போன்றவை அனைத்தும் நம்மிடம் இருக்கின்றன. அறியாமையைப் போக்கும்போது இந்த உயர்பண்புகள் வெளிபடத் தொடங்குகின்றன. இன்றைய மாணவனே எதிர்காலத்தின் சமுதாயம். அதனால், மாணவப்பருவத்தில் இருந்தே நல்லொழுக்கத்துடன் வாழவும், சேவை மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருக்க கல்வி வழிகாட்ட வேண்டும். கல்வித் திட்டத்தில், தினமும் தியானப்பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். தியானம் மூலம் மனம் ஒருமுகப்பட்டு விட்டால் மாணவர்களின் கிரகிக்கும் ஆற்றலும், படித்ததை நினைவில் கொள்வதும் எளிதாகி விடும். இன்றைய மாணவன் படிப்பது அவ்வளவு சுலபமல்ல. தகவல் தொடர்பு சாதனங்கள், விளையாட்டு, கேளிக்கை நிகழ்ச்சிகள் என பல்வேறு வகையிலும் அவர்களின் மனம் அலைக்கழிக்கப்படுகிறது. இதனால், அவர்களால் மனதை படிப்பில் ஈடுபடுத்த முடியாமல் போகிறது. பொழுதுபோக்கில் ஈடுபடும் மாணவனின் மனம் தொடர்ந்து 20 நிமிடம் கூட முழுமையான கவனத்துடன் பாடத்தை படிக்க முடியவில்லை என அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு மனநோய் என கருதும் அளவிற்கு வளர்ந்து விட்டதாக கூறுகின்றனர். தியானம் ஒன்றே இந்த நோயைக் குணப்படுத்த உதவும். படிப்பு மட்டுமில்லாமல் விளையாட்டு, வேலை, சாப்பிடுவது என எதில் ஈடுபட்டாலும் அதை ஒரு தவமாகச் செய்ய மாணவர்களை பழக்க வேண்டும் என்கிறார் விவேகானந்தர். சிறந்த குணம், மனவலிமை, அறிவு வளர்ச்சியை உண்டாக்குவதோடு, மாணவர்களை தன்னம்பிக்கையுடன் சொந்தக்காலில் நிற்கத் துணை செய்வதாக கல்வி அமைய வேண்டும்.  உணவு, துõக்கம், உடற்பயிற்சி, பொழுதுபோக்கு போன்றவற்றில் மாணவர்களுக்கு ஒரு ஒழுங்குமுறையை வகுக்க வேண்டும். இந்த ஒழுங்குமுறையே அவர்களை தீயபழக்கங்களுக்கு அடிமையாகாமல் தற்காத்துக் கொள்ள உதவும்.

மகான் பஜானந்தர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !