பழநி கோயில் யானை பாதை மராமத்து பணிக்காக மூடல்
பழநி: பழநி மலைக்கோயில் யானைப்பாதை மராமத்து பணிகளுக்காக அடைக்கப்படுகிறது. பழநிகோயிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக்குசெல்கின்றனர். சில நாட்களாக பெய்த மழையால், யானைப்பாதை இடும்பர் கோயில் அருகே 3 மரங்கள் கீழே விழுந்தது, மேலும் அவ்வழியில் உள்ள இரண்டு உபயதாரர் மண்டபங்கள் சேதமடைந்துள்ளன.மரங்களை அகற்றும் பணி, மண்டபங்களில் மராமத்து பணி நடைபெற உள்ளதால் மலைகோயிலுக்கு யானைப்பாதையில் பக்தர்கள் செல்ல தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதைப்போலவே மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் படிப்பாதை எண் 8 அருகே படிகள் சேதமடைந்துள்ளது. ஆகையால் அவற்றை விரைவில் சரிசெய்ய வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோயில்நிர்வாகத்தினர் கூறுகையில்,‘ யானைபாதையில் மரங்கள் விழுந்தது. அதனை அகற்றும் பணி நடக்கிறது. சேதமடைந்துள்ள படிகளையும் சரி சரிசெய்யப்படும். யானைப்பாதை மராமத்து பணிக்காக மூடப்பட்டது. நேற்று மாலை பணி இல்லாத காரணத்தால் பக்தர்கள் பயன்பாட்டிற்காக திறந்து விட்டோம். இருப்பினும் இரண்டு மண்டபங்களில் மராமத்து பணிகள் நடைபெற உள்ளதால் அவ்வேலை நடக்கும் நாட்களில் யானைப்பாதை மூடப்படும்,’ என்றனர்.