வீரராகவப் பெருமாள் கோவில் யாகசாலை கால்கோள் நடும் விழா!
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்துக்கு, யாக சாலை அமைக்க கால்கோள் நடும் விழா நேற்று நடந்தது. திருப்பூர் நகரின் மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீபூமி நீளா சமேத ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், ஹயக்கிரீவர், தன்வந்திரி சுவாமிகளுக்கு தனி சன்னதிகள், கருடாழ்வார் வாகன மண்டபம், ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் உற்சவர் சன்னதி கோபுரம், சொர்க்க வாசல் கோபுரம் மற்றும் தெற்கு நிலை கோபுரம், புதிய தெப்பக்குளம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. உட்பிரகாரம் முழுவதும் கருங்கல் தளம் அமைத்தல், எட்டு சன்னதிகள் மற்றும் ராஜகோபுரத்துக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.வரும் டிச., 1ல் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு, பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.மேலும், 108 திவ்ய தேசங்களில் இருந்து திருமண், புனித நீர், துளசி ஆகியவை எடுத்து வர தனி குழு சென்றுள்ளது. நேற்று, கும்பாபிஷேகத்துக்கான யாக சாலை அமைக்க, கால்கோள் நடும் விழா நடந்தது.நேற்று காலை 10.00 மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, சொர்க்கவாசல், தெப்பக்குளம் அமைந்துள்ள பகுதியில் யாகசாலைகளுக்கான கால்கோள் நடப்பட்டது. யாக சாலை, 22 வேதிகைகள் மற்றும் 36 யாக குண்டங்களுடன், அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கும் பணி துவங்கியது. இதில், திருப்பணி குழுவினர், கோவில் பட்டாச்சாரியார்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.