தேசிய நெடுஞ்சாலையில் கோவில்: ஜாக்கி மூலம் நகர்த்தி வைக்கும் பணி!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே, தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கோவிலை, ஜாக்கி வைத்து உடையாமல் உள்ளே தள்ளும் வேலை நடக்கிறது. விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த தச்சர் பஸ் நிறுத்தம் அருகே, நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையோரம், விநாயகர், மாரியம்மன் கோவில் உள்ளது.கோவிலின் ஒரு பகுதி நெடுஞ்சாலைத் துறையினரின் அளவீட்டுக்குள் வருவதால், உள்புறமாக நகர்த்தி வைக்க, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதை தொடர்ந்து கோவிலை உடைக்காமல், சுவர்களில் விரிசல் விழாமல், எந்தவித சேதமுமின்றி உள்ளே தள்ளி வைப்பதற்கு கோவில் நிர்வாகத்தினர், அரியானா மாநிலத்தை சேர்ந்த டி.என்.பி.டி., நிறுவனத்தினரின் ஒத்துழைப்பை நாடினர்.கடந்த ஒரு மாதமாக, 10க்கும் மேற்பட்ட அரியானா பணியாளர்கள் கோவிலை மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 300க்கும் மேற்பட்ட ஜாக்கிகள் மூலம் கோவிலை அடித்தளத்தில் இருந்து பிரித்து, 1 அடி அளவிற்கு மேலே உயர்த்தினர். பின், வடிவம் மாறாமல் ரோலர் மூலம், 40 அடி துாரத்திற்கு உள்பகுதியில் நகர்த்தி வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும், 2 மாதங்களில் இப்பணிகள் முழுமை பெற்றுவிடும் என, பணியாளர்கள் தெரிவித்தனர்.தேசிய நெடுஞ்சாலையோரம், கோவிலை வடிவம் மாறாமல், ஜாக்கிகள் மூலம் வேறிடத்திற்கு மாற்றும் பணிகளை, ஏராளமான மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.