மருதமலையில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்!
ADDED :4000 days ago
வடவள்ளி : மருதமலையில் கந்த சஷ்டி விழாவின் நிறைவாக திருக்கல்யாண உற்சவ விழா நேற்று நடந்தது. முருகனின் ஏழாம் படைவீடாக போற்றப்படும் மருதமலையில், கடந்த 26ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்கியது. இதில், முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து, வெற்றி விழாவை கொண்டாடிய சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. அப்போது, முருகனுக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. தொடர்ந்து, முருகன் வெள்ளை யானை வாகனத்தில், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கந்த சஷ்டி விழாவின் துவக்க நாளில் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், நேற்று தங்கள் விரதத்தை முடித்துக்கொண்டனர். விழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.