சோடச மகாலிங்க கோவிலில் மண்டபத்தை சீரமைக்க உத்தரவு
சென்னை : கும்பகோணம் மகாமக குளத்தை ஒட்டியுள்ள சோடசமகாலிங்க சுவாமி கோவிலில், தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்த மண்டபத்தை சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: வரும், 2016 பிப்ரவரி மாதத்தில் நடக்க உள்ள மகாமக விழாவை முன்னிட்டு, கும்பகோணத்தில் உள்ள, 69 கோவில்கள், 12 கோடி ரூபாயில் செப்பனிடப்படும் என, சட்டசபையில், 110வது விதியின் கீழ் முதல்வர் அறிவித்திருந்தார். இதன்படி, மகாமக குளத்தை சுற்றி அமைந்துள்ள சோடசமகாலிங்க சுவாமி கோவில் உட்பட, 69 கோவில்களை செப்பனிடும் பணிக்கான ஒப்பந்தங்கள் விரைவில் கோரப்பட உள்ளன. இதில், மகாமக குளத்தை சீரமைக்க, சுற்றுச்சூழல் துறையிடமிருந்து, 72 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டது. சோடசமகாலிங்க சுவாமி உட்பட, 16 சிவலிங்கங்கள் அமைந்துள்ள கோவில்களை செப்பனிட, 19.38 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சோடசமகாலிங்க சுவாமி கோவிலில் உள்ள, 16 கால் மண்டபத்தின் ஒரு பகுதியில், 50 சதுரடி பரப்பு, தொடர் மழையால் அண்மையில் இடிந்து விழுந்தது. இது, 100 ஆண்டுகளை கடந்த மண்டபம் என்பதால், இதை பழமை மாறாமல் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சாரம் கட்டப்பட்டு செப்பனிடும் பணி விரைவில் துவங்கப்பட உள்ளது. இதே பகுதியில் நடனகோபாலன் தெருவில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில், தொடர் மழையால் இடிந்து விழுந்த முன்பக்க மண்டபமும் விரைவில் சீரமைக்கப்படும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.