உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூரில் சரண கோஷத்துடன் விரதத்தை துவக்கிய பக்தர்கள்!

திருப்பூரில் சரண கோஷத்துடன் விரதத்தை துவக்கிய பக்தர்கள்!

திருப்பூர் : கார்த்திகை முதல் நாளான நேற்று, ‘சரணம் ஐயப்பா’ என்ற கோஷத்துடன், பக்தர்கள், தங்களின் விரதத்தை துவக்கினர். திருப்பூர் ஐயப்பன் கோவிலில், நேற்று 3,000 பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

கார்த்திகை மாத முதல் நாளில், சுவாமி ஐயப்பனுக்கு மாலை அணிந்து, 41 நாட்கள் விரதம் இருந்து, சபரிமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வது, பக்தர்களின் வழக்கம். மண்டல பூஜை அல்லது மகரவிளக்கு ஜோதி காலத்தில் சுவாமியை தரிசனம் செய்யும் வகையில், பக்தர்கள் தங்களது பயண திட்டத்தையும், விரத காலத்தையும் அமைத்துக் கொள்கின்றனர். கார்த்திகை முதல் நாளான நேற்று, திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவிலில், ‘சரணம் ஐயப்பா’ கோஷம் முழங்க, பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். கோவில் நடை, நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது; 5.00 மணிக்கு கணபதி ஹோமத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி துவங்கியது. குருசாமிகள் மாலை அணிந்து கொண்டதை தொடர்ந்து, சிறியவர் முதல் பெரியவர் வரை 3,000 பக்தர்கள், வரிசையில் காத்திருந்து, ஐயப்ப சுவாமிக்காக மாலை அணிந்து கொண்டனர். காலை 9.30 மணி வரை, தொடர்ந்தது. ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்ற கோஷம் அதிர, பரவசத்துடன் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.விரத காலத்தில் தினமும் காலை, மாலை இருவேளைகளில் குளித்து, ஐயப்பனின் 108 சரண கோஷம் பாடி, முழுமையான பிரம்மச்சரிய விரதத்தை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும். மனம், சொல், செயலில் தூய்மையை பின்பற்றி, எண்ணம் முழுக்க இறைவனை நினைத்திருப்பதே, விரத காலத்தின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும் என முதன்முறையாக மாலை அணிந்த கன்னிசாமிகளுக்கு, குருசாமிகள் அறிவுரை வழங்கினர்.இதேபோல், திருப்பூர் ஈஸ்வரன் கோவிலிலும் நேற்று காலை 1,050 பக்தர்கள், ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து விரதம் துவக்கினர். கருப்பு, காவி மற்றும் நீலநிற வேட்டி, துண்டு அணிந்து வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு குருசாமிகள், துளசி மற்றும் ருத்ராட்ச மாலைகளை அணிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !