மதுரைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அவதி...அடிப்படை வசதிகள் இல்லை!
மதுரை:சபரிமலை சீசன் துவங்கிய நிலையில் வெளியூரில் இருந்து மதுரை வரும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் எல்லீஸ்நகரில் நிறுத்தப்படுகின்றன. அங்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தவும், பக்தர்கள் தங்குவதற்கும் எல்லீஸ்நகரில் இட வசதி செய்யப்பட்டுள்ளது. மதுரைக்கு தினமும் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். நுாற்றுக்கணக்கான வாகனங்கள் எல்லீஸ்நகரில் கட்டணம் செலுத்தி நிறுத்தப்படுகின்றன.”பக்தர்கள் வசதிக்காக பத்து நவீன பைபர் கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதி கோயில் சார்பில் செய்யப்படும்,” என இணை கமிஷனர்நடராஜன் கூறியிருந்தார். குறைந்தபட்சம் கழிப்பறை வசதி கூட செய்யப்படவில்லை. பக்தர்கள் திறந்த வௌியில் ஆங்காங்கு மல, ஜலம் கழிப்பதால் சுகாதாரக் கேடு நிலவுகிறது. பஸ்கள் நிறுத்துமிடம் சேறும், சகதியுமாக இருப்பதால் நடக்க வழியின்றி சிரமம் அடைகின்றனர்.செந்தில்குமார், அகில பாரத ஐயப்பா சேவா சங்க பொறுப்பாளர்: பக்தர்களுக்கு குடிநீர் வசதி உள்ளது. கழிப்பறை வசதியின்றி பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். திறந்தவௌியை கழிப்பறையாக பயன்படுத்துவதால் அருகில் வசிப்பவர்களால் குடியிருக்க முடியவில்லை. மோதிலால், போக்குவரத்து கழக மேலாளர்: வாகனங்களை ஒழுங்குபடுத்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் மற்றொரு வழியில் வெளியேறினால் நெரிசலை தவிர்க்கலாம். தண்ணீர் வசதியுடன் நிரந்தர கழிப்பறைகள் அமைத்தால் நல்லது.ஜெயராமன், ஐயப்ப பக்தர், காஞ்சிபுரம்: வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தரையில் கால் வைக்க பயமாக இருக்கிறது. சேறும், சகதியில் சிக்கி பக்தர்கள் கீழே விழுகின்றனர். சிலருக்கு காலில் சேற்றுப்புண் ஏற்பட்டுள்ளது. சிறுநீர் கழிக்கக்கூட வழியில்லை. மாநகராட்சி கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.சபரிமலை சீசன் துவங்கும் முன்பே அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்திருக்க வேண்டும். கோயில் இடம் என்பதால் மாநகராட்சி கண்டுகொள்ளவில்லை. நெரிசலை தவிர்க்க போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும். எல்லீஸ்நகர் ரோட்டை அகலப்படுத்தி, தார் போட வேண்டும்.