செங்கன்னூரில் தகவல் மையம்:அப்பம்,- அபிஷேக டிக்கெட் கிடைக்கும்!
சபரிமலை:கேரளாவின் செங்கன்னுார் ரயில் நிலையத்தில் சபரிமலை பக்தர்களுக்காக தகவல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு அப்பம், -அரவணை, அபிஷேக டிக்கெட் கிடைக்கும்.தமிழகத்தில் இருந்து ரயில் வழி சபரிமலை செல்லும் பக்தர்கள் பலர் செங்கன்னுார் ரயில் நிலையத்தில் தான் இறங்குகின்றனர்.
இங்கிருந்து பம்பைக்கு அதிக அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. செங்கன்னுார் ரயில் நிலையத்தில் இருந்து ௩ மணி நேர பயணத்தில் பம்பை செல்லலாம்.வடமாநிலங்களில் இருந்து தமிழகம் வழி கேரளா செல்லும் ரயில்களும் செங்கன்னுார் வழியாக செல்கின்றன. இங்கு வரும் பக்தர்களுக்காக ரயில் நிலைய வாசலில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு, தனலட்சுமி வங்கி கிளை சார்பில் தகவல் மையம் திறக்கப்பட்டு உள்ளது.
இதை தேவசம்போர்டு தலைவர் கோவிந்தன்நாயர் துவக்கி வைத்தார். உறுப்பினர் குமாரன் தலைமை வகித்தார். ஐயப்பா சேவாசங்க துணை தலைவர் விஜயகுமார், தேவசம் தலைமை பொறியாளர் முரளிகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.இங்கு அப்பம், அரவணை, அபிஷேக டிக்கெட்டுகள் பெறலாம். சன்னிதானத்தில் வரிசையில் காத்திருக்காமல் அப்பம், அரவணை பெறலாம். இது, வெளி மாநில பக்தர்களுக்கு வசதியாக இருக்கும் என தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.