சீனிவாசபெருமாள் கோவில் தெப்பத்திருவிழா இன்று துவக்கம்!
கும்பகோணம்: நாச்சியார்கோவில், சீனிவாசபெருமாள்கோவிலில் முக்கோடி தெப்பதிருவிழா, கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில், வஞ்சுளவல்லி தாயார் உடனாய சீனிவாசபெருமாள் கோவில் உள்ளது. சோழநாட்டு திருப்பதியில் நாற்பதில் 14வது திருப்பதியாகவும், பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான திருமங்கை ஆழ்வாருக்கு சீனிவாசபெருமாளே நேரில் ஆச்சாரியனாய் வந்த பஞ்சமஸ்காரம் செய்வித்த தலமாகவும், ஆழ்வாரால், 100 பாசுரங்கள் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட தலமாகவும் விளங்குகிறது. இத்தலத்தில், ஆண்டுதோறும் முக்கோடி தெப்பத்திருவி ழா விமரிசையாக நடைபெறும். இன்று காலை, 8 மணிக்கு மேல் கொடியேற்றம் நிகழ்ச்சியுடன், முக்கோடி தெப்பத்திருவிழா தொடங்குகிறது. மாலை சூரியபிரபையில் பெருமாள் தாயார் வீதியுலா நடக்கிறது. விழா நாட்களில், காலை பல்லக்கிலும், மாலை பல்வேறு வாகனங்களிலும் பெருமாள் தாயார் வீதியுலா நடக்கிறது. வரும், 28ம் தேதி மாலை, 6 மணிக்கு உலக பிரசித்திபெற்ற கல்கருடசேவை நடக்கிறது. மூலவராகவும், உற்சவராகவும் அருள்பாலிக்கும் கல்கருடபகவான் நான்கு, 8, 16,32, 64 பேர்கள் என வாகன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு பெருமாள், தாயார் கல்கருடன் வாகனத்தில் வீதியுலா நடைபெறும். மறுநாள் மாலை, 6 மணிக்கு பெருமாள் தாயார் தெப்பம் உற்சவம் கண்டருளல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் ராதாகிருஷ்ணன், நிர்வாக அதிகாரி பொன்னழகு மற்றும் ஆலயப்பணியாளர்கள் செய்துள்ளனர்.