கோவை ஐயப்பன் பூஜா மகோத்ஸவம் 11 ஹோமங்களுடன் ருத்ரயக்ஞம்
கோவை: ஐயப்பன் பூஜா சங்கம் சார்பில், 64வது பூஜா மகோத்ஸவம் விழாவின் இரண்டாம் நாளான நேற்று, ருத்ரயக்ஞம் நிகழ்ச்சி நடந்தது. கோவை ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் சார்பில், 64வது பூஜா மகோத்ஸவம் விழா நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில் மகாகணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நவகிரக ஹோமம், சத்ருசம்ஹார மற்றும் சுப்ரமணியமாலா மந்த்ர ஹோமம் நடந்தது. இரண்டாம் நாளான, நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், பூர்வாங்கம், கலசஸ்தாபனம், ஆசார்ய ரித்விக் வர்ணம், மஹா ருத்ரயக்ஞம் நடந்தன. ருத்ரயக்ஞம் நிகழ்ச்சியில், 11 ஹோமங்கள் வளர்த்து பூஜை நடந்தது. தொடர்ந்து, சிவனுக்கு மகா அபிஷேகங்கள் நடந்தன. பின், பூர்ணாஹூதி, வசோர்த்தாரை பூஜைகள் நடந்தன. பின், மகா தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர். வழிபாடு முடிந்ததும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக, நேற்று மாலை ஸ்ரேயா ஸ்ரீதரின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி நடந்தது. மூன்றாம் நாளான இன்று, நவசண்டி மஹாயக்ஞம் நடக்கவுள்ளது.