தேவாரத்தில் இன்று சக்தி, யாழி பூஜை!
தேவாரம்: கடந்த 1956 முதல் தேவாரத்தில் சக்தி, யாழி பூஜை தொடர்ந்து நடைபெறுகிறது. இன்று 58 வது சக்தி, யாழி பூஜை நடக்கிறது. தேவாரம் ஜமின்தார் தங்கப்பாண்டியர் தலைமை வகிக்கிறார். ஏலக்காய் வர்த்தக பிரமுகர்கள் அய்யப்பசாமி, மனோகரன், கதிரேசன் முன்னிலை வகிக்கின்றனர். நேற்று மாலை மணி மண்டபத்திலிருந்து உற்சவர் ரெங்கநாதர் கோயில் முன்புறம் அமைந்துள்ள ஆசிரமத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
இன்று காலை 8 மணி முதல் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.மாலை 4.30 மணிக்கு 7 கன்னிமார்கள் நெய் கொப்பரை ஏந்தி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு யாழி வளர்க்கப்படு கிறது. இரவு 11 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் நகர்வலம் நடைபெறும். ஏற்பாடுகளை குருநாதர்கள் நாராயணன், மணிகண்டன் மற்றும் நிர்வாக தலைவர் சுபாஷ்சந்திரபோஸ், ஐயப்ப சுவாமி மணிமண்டப நிர்வாகஸ்தர்கள் செய்துள்ளனர்.
குருநாதர்கள் நாராயணன், மணிகண்டன் கூறியதாவது: கடந்த 1956 ல் அப்போதைய குருநாதர் எஸ்.தங்கையா சுவாமி அவர்களால், தேவாரத்தில் சக்தி, யாழி பூஜை துவக்கப்பட்டது. அவர்களின் வழியில் குருநாதர் சன்னாசி சுவாமிகள், சுப்ரமணிய சுவாமிகளால் தொடர்ச்சியாக நடத்தப்படு கிறது. இந்த ஆண்டு 58 வது சக்தி, யாழி பூஜை இன்று ரெங்கநாதர் கோயில் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள ஆசிரமத்தில் நடக்கிறது. தேவாரத்தை சுற்றியுள்ள 18 கிராம மக்கள் ஜாதி பேதமற்று கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ய வருவர். வெளியூர் பக்தர்களை அழைப்பதற்கு மேள, தாளம் முழங்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.
அன்னதானம் வழங்கபடும். இரவு 11மணிக்கு சுவாமி ஊர்வலம் நான்கு ரத வீதிகளில் நடைபெறும். நாளை காலை யாழியில் பக்தர்கள் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும், என்றனர்..