புத்தாண்டில் வைகுண்ட ஏகாதசி!
இந்த ஆண்டு பிறப்பில் இரட்டிப்பு சந்தோஷம். காரணம், புத்தாண்டு நன்னாளில் வைகுண்ட ஏகாதசி விரதமும் அனுஷ்டிக்கிறோம். புதிய ஆண்டு நம் பூலோக வாழ்க்கையாக சொர்க்கமாக அமைய ஸ்ரீரங்கம் பெருமாளைப் போற்றுவோமா!.
* ஸ்ரீரங்கத்தில் சயனகோலத்தில் வீற்றிருப்பவரே! காண்பவர் மயங்கும் பேரழகு மிக்கவரே! நாராயண மூர்த்தியே! அச்சுதனே! தாமரைக் கண்களைக் கொண்டவரே! மூவுலகங்களையும் காத்தருள்பவரே! லட்சுமி வசிக்கும் திருமார்பைக் கொண்டவரே! எங்களைக் காத்தருள்வீராக.
* பிரம்மாவாலும், தேவர்களாலும் வணங்கப்படும் தாமரைப் பாதங்களைப் பெற்றவரே! பாஞ்சஜன்யம் என்னும் சங்கை ஏந்தியவரே! பிரகாசம் மிக்க சக்ராயுதத்தைத் தாங்கியவரே! கருணைக் கடலே! புண்ணிய கீர்த்தி மிக்கவரே! நம்பியவரைக் கரை சேர்ப்பவரே! எங்களுக்கு ஆரோக்கியம் மிக்க நல்வாழ்வு தர வேண்டும்.
* பத்மநாபரே! கருணைப் பார்வையால் வேண்டும் வரம் அளிப்பவரே! மகாவிஷ்ணுவே! முகுந்தனே! முராரி கிருஷ்ணா! கோபாலா! கோவிந்தா! வாசுதேவா! மங்களகரமான சரீரத்தைப் பெற்றவரே! திருமகளின் மனம் கவர்ந்தவரே! ஆதிசேஷன் மீது துயில்பவரே! எங்கள் இல்லத்தில் செல்வ வளம் பெருக வேண்டும்.
* ரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்கள் அணிந்தவரே! வைகுந்தனே! கஸ்தூரி திலகமிட்ட அகன்ற நெற்றியைப் பெற்றவரே! பூரண சந்திரன் போல முகத்தாமரை கொண்டவரே! செந்தாமரை போல் சிவந்த இதழ் உடையவரே! காவிரிக்கரையில் வாழ்பவரே! குறையொன்றுமில்லாதவரே! எங்களுக்கு மனநிறைவான வாழ்வைத் தந்தருள வேண்டும்.
* பக்தர்களின் திலகமே! உயிர்களை சம்சாரக் கடலில் இருந்து காப்பாற்றுபவரே! ஆதிமூலம் என அழைத்த யானையின் இடர் தீர்த்தவரே! சாதுக்களின் உள்ளத்தில் வாழ்பவரே! பட்டு பீதாம்பரதாரியே! காவிரியின் மத்தியில் துயிலும் ரங்கராஜரே! உம் அருட்பார்வையை எங்களுக்கு காட்டியருள வேண்டும்.
* காண்போர் மனதை கவரும் கள்வரே! காதுவரை நீண்டிருக்கும் பெரிய கண்களைப் பெற்றவரே! இந்திர நீலமணி போன்ற மேனி வண்ணம் கொண்டவரே! ஏழுமதில்களால் சூழப்பட்ட ஸ்ரீரங்கத்தில் வீற்றிருப்பவரே! மதுசூதனரே! குன்றைக் குடையாக பிடித்தவரே! கல்யாண குணங்களால் பரிமளிக்கும் ரங்கராஜரே! இந்த உலக உயிர்களெல்லாம் நலமோடு வாழ அருள்புரிய வேண்டும்.
ஆண்டுக்கு 304 நாட்கள் தான்: இன்று நாம் பயன்படுத்தும் காலண்டர் பல்வேறு மாறுதல்களைப் பெற்று வந்ததாகும். கிரேக்கர்களே முதன் முதலில் காலண்டரை உருவாக்கினர். இவர்களிடமிருந்து ரோமானியர்கள் ஆண்டுக்கான நாட்களைக் கணிக்கும் முறையைக் கடன் வாங்கினார்கள். ஆரம்ப காலத்தில் இன்றுள்ள ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களும் கிடையாது. மார்ச் தொடங்கி டிசம்பர் முடிய பத்து மாதங்களே இருந்தன. ஒரு ஆண்டுக்கு மொத்த நாட்கள் 304 தான் இருந்தது. கி.மு.700ல், ரோமானிய மன்னர் நூமா பாம்பிளியஸ் ஜனவரி, பிப்ரவரி மாதங்களைச் சேர்த்து ஆண்டுக்கு 12 மாதங்கள் ஆக்கினார். ஆனால், ஜனவரி 11வது மாதமாகவும், பிப்ரவரி 12வது மாதமாகவும் இருந்தது. கி.மு. 46ல் ஜுலியஸ் சீசர் மேலும் சில திருத்தங்கள் செய்து ஜனவரி, பிப்ரவரியை ஆண்டின் முதல் இரு மாதங்களாக மாற்றினார். இனி மாதங்களுக்கு பெயர் உருவானது பற்றி பார்ப்போம்.
ஜனவரி: ஜனஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரால் இம்மாதம் அமைந்தது. இக்கடவுளுக்கு இரண்டு தலைகள் உண்டு. கதவுகள் மற்றும் வாசல்களைக் காக்கும் கடவுள் தான் ஜனஸ். ஒரு தலை கடந்த காலத்தையும், மற்றொரு தலை வருங்காலத்தையும் குறிப்பிடும்.
பிப்ரவரி: ரோமானியர்கள் இம்மாதத்தின் 15ம் நாளை தூய்மை நாளாகக் கொண்டாடினர். அந்த நாளை ‘பெப்ருய’ என குறிப்பிட்டனர். ‘பெப்ருய’ என்றால் ‘தூய்மை செய்து கொள்ளுதல்’ என்று பொருள். அதைக் குறிக்கும் விதமாக இம்மாதத்தை ‘பெப்ருரியவஸ்’ என்றனர். இதுவே பிப்ரவரி என மாறியது.
மார்ச்: ரோமானியர்களின் போர்க்கடவுள் மார்ஸ். இக்கடவுளின் பெயரால் தோன்றியதே இந்த மாதம். கையில் ஈட்டியுடனும், கேடயத்துடனும் காட்சியளிக்கும் மார்ஸ் தான் விவசாயத்துக்கு கடவுள். இந்து மதத்தில் மார்ஸ் எனப்படும் செவ்வாயை நிலத்துக்கு அதிபதி என்கிறோம்.
ஏப்ரல்: ‘ஏப்பிரைர்’ என்ற லத்தீன் சொல்லில் இருந்து பிறந்ததே இந்த மாதம். இச்சொல்லுக்கு ‘திறந்து விடு’ என்பது பொருள். ஆண்டின் செழிப்புக்கு வழிவகுப்பது இந்த மாதமே.
மே: ‘மையா’ என்ற தேவதையின் பெயரில் இருந்து வந்தது தான் மே. இந்த தேவதையின் தந்தை தான் உலகத்தைத் தோளில் சுமக்கும் அட்லஸ்.
ஜூன்: ‘ஜூனோ’ என்னும் தேவதையை இளமையின் சின்னமாக ரோமானியர்கள் வழிபட்டனர். இந்தப்பெயரில் இருந்து வந்ததே இந்த மாதத்தின் பெயராக உள்ளது.
ஜூலை: இந்த மாதத்திற்கு ‘க்விண்டிலிஸ்’ என்று பெயர் இருந்தது. மார்க் ஆண்டனி இந்த மாதத்திற்கு ஜுலியஸ் சீசரின் பெயரைச் சூட்டினார். அப்போது ‘ஜூலி’ என்று உச்சரிக்கப்பட்ட இம்மாதம், 19ம் நூற்றாண்டின் துவக்கம் முதல் ஜூலை என உச்சரிக்கப்படுகிறது.
ஆகஸ்ட்: ‘செக்ஸ்டிலிஸ்’ எனப்பட்ட இந்த மாதத்தை ரோமானியர்கள் தங்கள் மன்னரான அகஸ்டஸை பெருமைப்படுத்தும் விதத்தில் ‘அகஸ்டஸ்’ என்று மாற்றி அழைத்தனர். அதுவே ஆகஸ்ட் என்றாகி விட்டது.
செப்டம்பர்: ஆரம்பத்தில் 7வது மாதமாக இருந்தது. அதை ‘செப்டம்’ என்றே அழைத்தனர். ‘செப்டம்’ என்றால் ரோமானிய மொழியில் ‘ஏழு’ என்று பொருள். புதிய அமைப்பின் படி ஏழு ஒன்பதாக மாறிய போதும், பெயரில் மட்டும் மாற்றம் ஏற்படாமல் ‘செப்டம்’ என்பது செப்டம்பராகவே நிலைத்து விட்டது.
அக்டோபர்: இது ஆரம்பத்தில் 8வது மாதமாக இருந்தது. அப்போது இதன் பெயர் ‘அக்ட்டோ’ ரோமானிய மொழியில் இதற்கு ‘எட்டு’ என்று பொருள். பின்னர் 10வது மாதமாக மாறிய போதும் அக்டோபர் என்ற பெயர் மட்டும் மாறவில்லை.
நவம்பர்: ஆரம்பத்தில் ‘நவம்’ (ஒன்பது என்று பொருள்) என்ற பெயரில் 9வது மாதமாக இருந்தது. பின்னர் 11வது மாதமாக மாறியது. ஆனால் பெயரில் மாற்றம் இல்லை. சமஸ்கிருதத்தில் கூட ஒன்பது என்பதற்கு ‘நவம்’ என்ற வார்த்தையே உள்ளது. இதையே நவராத்திரி, நவக்கிரகம் என்று சொல்கிறோம்.
டிசம்பர்: ‘டிசம்’ என்றால் ‘பத்து. இதையே சமஸ்கிருதத்தில் சற்று மாற்றி ‘தசம்’ என்கிறோம். தசரதர் (பத்து தேர்களை உடையவர்), ராவணனை தசமுகன் (பத்து தலையுடையவன்) என்று குறிப்பிடுகிறார்கள். இந்த மாதம் 12வது மாதமாக மாறிய போதும் கூட, பெயர் மாற்றம் பெறாமல் டிசம்பர் என்றே வழங்கி வருகிறது.