உடுமலை சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு!
உடுமலை: உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷம் முன்னிட்டு, நேற்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. உடுமலை தில்லை நகரில் உள்ள ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி, மாலை 4.30 மணிக்கு சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களில், அபிேஷகம் நடந்தது. ரத்தின லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது. குறிச்சிக்கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவலிங்கேஸ்வரர் சன்னதியில், சுவாமிக்கு நேற்று மாலை 4.30 மணிக்கு, சிறப்பு அபிேஷகத்தை தொடர்ந்து, அலங்காரம் பூஜை நடந்தது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதி, பெதப்பம்பட்டி ரோடு, ஏரிப்பாளையத்தில் உள்ள சித்தாண்டீஸ்வரர் கோவில், எலையமுத்துார் பிரிவில் உள்ள புவன கணபதி கோவிலில் உள்ள சிவன் சன்னதி, ருத்ரப்பா நகரில் உள்ள பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில், மடத்துக்குளம், கொழுமத்தில் உள்ள தாண்டேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில்களில், பிரதோஷம் முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.
ஆனைமலை: ஆனைமலை அடுத்த பெத்தநாயக்கனூர் பட்டீஸ்வரன் கோவில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மூலவரான பட்டீஸ்வரர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆனைமலையை சுற்றி ஆற்றின் கரையில் உள்ள சிவன் கோவில்களான மண்கண்டேஸ்வரர், சித்தாண்டீஸ்வரர், சோமேஸ்வரர், ஆலயங்களில் பிரதோஷ பூஜையையொட்டி நேற்றுமாலை 4:30 மணிக்கு பால், தயிர், பஞ்சாமிருதம், இளநீர், சந்தனம், விபூதி, உள்ளிட்ட 16 வகையான பூஜை திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பெத்தநாயக்கனூரில் உள்ள பட்டீஸ்வரருக்கு அலங்கார பூஜை நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு முதலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மூவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.