பொங்கலை நாய் சாப்பிட்டதால் விழாவை தவிர்த்த கிராம மக்கள்!
நாமக்கல்: சுவாமிக்கு வைக்கப்பட்ட பொங்கலை நாய் சாப்பிட்டதால், அதை தீட்டாக கருதிய கிராம மக்கள், மூன்று தலைமுறைகளாக பொங்கல் பண்டிகையை தவிர்த்து வருகின்றனர். நாமக்கல்லில் இருந்து, திருச்செங்கோடு செல்லும் சாலையில், சிங்கிலிப்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. மூன்று தலைமுறைகளுக்கு முன், கிராமத்தில் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அப்போது, சுவாமிக்கு படைப்பதற்காக, பானையில் வைக்கப்பட்டிருந்த பொங்கலை, நாய் சாப்பிட்டுள்ளது.இதை தீட்டாக கருதிய கிராம மக்கள், அந்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை தவிர்த்தனர். அதற்கடுத்த ஆண்டு, பண்டிகையை கொண்டாட முற்பட்டபோது, கிராமத்தில், சில பசு மாடுகள், அடுத்தடுத்து இறந்தன. இது, கிராம மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.அதன் காரணமாக, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை, கிராம மக்கள் தவிர்த்தனர். தொடர்ந்து, மூன்று தலைமுறைகளாக, இந்த, வினோத பழக்கத்தை கிராம மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை சமயத்தில், சுற்று வட்டார கிராமங்கள் ஆரவாரமாக காணப்படும் நிலையில், சிங்கிலிப்பட்டி கிராம மக்கள், எவ்வித பரபரப்புமின்றி, வழக்கமான பணிகளில் ஈடுபடுவர். இப்பழக்கத்தை, அந்த கிராமத்தில் இருந்து வெளியேறி, வெளியூர்களில் வசிக்கும் மக்களும் கடைபிடித்து வருகின்றனர்.எதேச்சையாக நடந்த சம்பவத்தை வைத்து, கிராம மக்கள் பண்டிகை கொண்டாடத்தை தவிர்க்கக் கூடாது. தமிழரின் அடையாளமாக கருதப்படும் பொங்கல் பண்டிகையை, கிராம மக்கள் கொண்டாட வேண்டும் என, இக்கிராமத்தை சேர்ந்த, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் இளங்கோ வலியுறுத்தி வருகிறார்.
அதன்படி, 10 ஆண்டுகளுக்கு முன், அவர் தன் வீட்டில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவதற்காக நடவடிக்கை மேற்கொண்டார். அப்போது, அவரது பசு மாடு திடீரென சுருண்டு விழுந்து இறந்தது. அதைக் கண்டு பீதியடைந்த மக்கள், பொங்கல் கொண்டாட்டத்தை, தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். மக்களின் மூடநம்பிக்கையை முறியடிக்கும் வகையில், இளங்கோ, தொடர்ந்து, கிராமத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் வழக்கத்தை, 13 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறார். அதேபோல், இந்தாண்டும், காணும் பொங்கலை கொண்டாட முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.பொங்கல் விழா புறக்கணிப்பால், இளைஞர்கள், சிறுவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.