உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிருங்கேரி பீடத்தின் அடுத்த பீடாதிபதி தேர்வு!

சிருங்கேரி பீடத்தின் அடுத்த பீடாதிபதி தேர்வு!

ஆதிசங்கரர் துவக்கிய நான்கு பீடங்களில், முதன்மையான சிருங்கேரி சாரதா பீடத்தின் புதிய பீடாதிபதி, தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சிருங்கேரி சாரதா பீடத்தின் ஜகத்குருவாக, ஸ்ரீ பாரதீ தீர்த்த மகா சுவாமிகள், அப்பொறுப்பில், கடந்த 25 ஆண்டுகளாக இருக்கிறார். சனாதன தர்மத்தை பரப்பும் பணியில் உள்ள இம்மடம், ஆதிசங்கரரால், 1,200 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட பெருமை உடையது. இதில் 36வது பீடாதிபதியாக விளங்கும், ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள் துறவறம் மேற்கொண்டு, 25 ஆண்டுகளானதை ஒட்டி, சிருங்கேரியில் நடந்த தர்மம் பரப்பும் விழாவில், தனக்கு அடுத்த பீடாதிபதி யார் என்பதை, ஸ்ரீ பாரதீ தீர்த்தர் தெரிவித்தார். திருப்பதியை சேர்ந்த ஸ்ரீ குப்ப வெங்கடேஸ்வர பிரசாத் சர்மா, தனக்கு அடுத்ததாக, சிருங்கேரி பீடத்தின் 37வது பீடாதிபதியாக விளங்குவார் என்று குறிப்பிட்டார். ’அன்னை சாரதா அருளுடன் பிரம்மச்சாரி ஸ்ரீ குப்ப வெங்கடேஸ்வர பிரசாத் சர்மா, ஜன., 23, 24ம் தேதிகளில் நடக்கும் சுவீகார விழாவில் முறைப்படி அடுத்த பீடாதிபதியாக பதவியேற்பார்’ என்றும் கூறினார். இத்தகவலை சிருங்கேரி மடத்தின் நிர்வாகி கவுரிசங்கர் முறைப்படி அறிவித்தார். அந்த அறிக்கையில், ’இம்மடத்தின் தொடர்ச்சியான பாரம்பரியப்படி சன்னியாச தீட்சை ஸ்ரீ குப்ப வெங்கடேஸ்வர பிரசாத்திற்கு தரப்படும். வேதாந்தத்தின் நுணுக்கமான பாடங்களை ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகளிடம் கடந்த நான்கு ஆண்டுகளாக இவர் கற்றிருக்கிறார்’ என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !